“டெங்கு காய்ச்சலை 90 சதவிகிதம் விரட்டலாம்!” மருத்துவர்களின் ஆலோசனை | "Dont worry about Dengue fever" says doctors!

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (27/09/2017)

கடைசி தொடர்பு:21:56 (27/09/2017)

“டெங்கு காய்ச்சலை 90 சதவிகிதம் விரட்டலாம்!” மருத்துவர்களின் ஆலோசனை

                                                         டெங்குக் காய்ச்சல் பரப்பும் கொசுக்கள்

‘... டெங்குக் காய்ச்சல்  எந்தத் தெருவில் இல்லை' என்று கேட்கும் நிலைமை முற்றிலும் மாறி, ‘எந்த வீட்டில் காய்ச்சல் இல்லை’ என்கிற அளவுக்கு இப்போது நோய்ப் பரவிக் கிடக்கிறது. காய்ச்சலுக்குச் சிகிச்சைபெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அரசு மருத்துவமனைகளில் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கவே இடமில்லாத நிலையில், ‘போதிய படுக்கை இல்லையே’ என்ற ஆதங்கம் மக்களிடம் கொஞ்சமும் இல்லை. காய்ச்சல் குறைந்தால் போதும் என்ற மனநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.

சமாதானமாகிக் கொள்ளும் மக்கள்

கேரளாவை ஒப்பிடும்போது நாங்கள் பரவாயில்லை என்று குமரி மாவட்டத்து மக்களும், குமரியை ஒப்பிடும்போது நாம் பரவாயில்லை என்று தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்து மக்களும் சதவிகிதக் கணக்கைப் போட்டுவைத்துச் சமாதானமாகி வருகின்றனர். குமரியில் பல ஆயிரம் பேரும், திருவள்ளூரில் சில ஆயிரம் பேரும் ‘மர்மக் காய்ச்சல்’ பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்புகள், மரணம்வரை நீண்டபோதுதான் அரசு, மர்மக் காய்ச்சலுக்கான காரணம் பற்றி அறிய நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. சென்னை நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன், சென்னை ஐ.ஐ.டி-யில் படித்துவந்த ஆந்திரத் தொழிலதிபரின் மகன், கோபாலபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன், திருவள்ளூர் மணவாளநகர் மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய  மரணங்களை இந்த 'டெங்குக் காய்ச்சல்' கொடுத்திருக்கிறது.

விழிக்குமா அரசு?

“டெங்கு நோயைப் பரப்பக்கூடிய வைரஸ், ஃப்ளேவி (Flavi virus) என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை வைரஸைப் பரப்பும் கொசுக்கள், பொதுவாகச் சுத்தமான நீரிலேயே முட்டையிடுகின்றன. 'ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes aegypti) என்ற வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள், பெரும்பாலும் பகலில்தான் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை" என்று  சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதுகுறித்த விழிப்பு உணர்வு முகாம்களைச் சுகாதாரத் துறையினர், இப்போது பரவலாக  நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும், நோயின் தன்மை விரிவடையும்போது மட்டுமே அரசும் விழித்துக்கொள்கிறது. வேகமாகப் பரவக்கூடிய காலரா போன்ற தொற்றுநோய்க்கும்கூட முழுமையான தீர்வைத் தரும் மருந்துகள் அரசின் கையில் இருக்கிறது. ஆனால், டெங்குக் காய்ச்சலை விரட்ட  அந்த அளவுக்கு மருந்துகள் இருக்கிறதா என்ற அச்சம்தான், மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஆயிரம் பேருக்கு டெங்குக் காய்ச்சல் இருக்கிறது என்றால், அதில் நான்கைந்து பேர் இறந்துவிடுகிறார்கள். இத்தனை பேர் காப்பாற்றப்பட்டு, நான்கைந்து பேர் மட்டும் இறப்பதற்கு என்ன காரணம்?

அரசு மருத்துமனைகளே சிறந்தது

டாக்டர் சுனில்இதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர் சுனில்,  "தகுந்த மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி மாத்திரைகளைப் பயன்படுத்துவது ஒரு காரணம். காய்ச்சல் கண்டவுடன் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள  மருத்துவமனைகளை அணுகித்தான் மக்கள் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்துக் கடைகள், தனியார் மருத்துவமனைகளுக்குப் போய்விட்டு அதன்பின் நோய்முற்றிய நிலையில் மக்கள், அரசு மருத்துவமனையைத் தேடி வருகின்றனர். மக்கள் அரசு மருத்துவமனைகளை உரிய நேரத்தில் அணுகுவதே சிறந்தது. அரசு மருத்துவமனைகளில் தரமான, விரைந்து குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவர்களும் இருக்கின்றனர் " என்றார்.

மக்களும்,  சுகாதாரத்துறையும்

‘தேவை’ அமைப்பின் நிர்வாகி எ.த.இளங்கோ கூறும்போது, “ ‘சுற்றுப்புறத் தூய்மை, தேங்கும் நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றைச் சுத்தப்படுத்துதல்,  நீர் தேங்கிய இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், டயர்கள், தேங்காய்ச் சில்லுகள், அம்மி மற்றும் உரல்களில் நீர் தேங்காமல் வைத்தல், ஈரத்துணிகளை ஒரே இடத்தில் மணிக்கணக்கில் போட்டுவைத்தல்' என்பவைகளை மட்டும்  மருத்துவ முகாம்களில் போதித்தால் போதாது. டெங்குக் கொசு உருவாகும் சூழலை தடுப்பது குறித்து, மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று சுகாதாரத் துறையினர் விளக்க வேண்டும். மக்களுக்கு நேரில்போய் அதுகுறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் டெங்குக் கொசுக்கள் ஒழியும். டெங்குக் காய்ச்சலில் இருந்து மக்கள் தப்பிக்க ‘தேவை’ அமைப்பின் நிர்வாகி எ.த.இளங்கோமுடியும், அடிப்படைச் சுகாதாரமும் மேம்படும்" என்றார்.

தடுப்பூசி இருக்கிறது

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, "கொசு ஒழிப்புக்கான தடுப்பூசி மருந்தை பிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பிரேசில், மெக்ஸிகோ, கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்வடார் போன்ற நாடுகளில் இப்போது இந்த மருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஊசி மருந்தால்,  85 முதல் 90 சதவிகிதம் வரையில் காய்ச்சலின் பாதிப்பைக் குறைக்க முடியும். அந்த மருந்தை காலத்தின் அவசியம் கருதி, உடனடியாக  நம்முடைய மாநில பயன்பாட்டுக்கு அரசு கொண்டுவர வேண்டும். அடுத்ததாக அடிப்படைக் கட்டமைப்பை சுகாதாரம் மிக்க கட்டமைப்பாக போர்க்கால அடிப்படையில் அரசு மாற்ற வேண்டிய தருணம் இது. அதேபோல், மக்களிடம் விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை  தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலேயே பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையில் போதிய ஆட்களை பணியமர்த்திட வேண்டும்." என்றார். சுகாதாரத்துறை காதுகொடுத்துக் கேட்க வேண்டிய முக்கிய செய்தி இதுதான்...


டிரெண்டிங் @ விகடன்