அண்ணா பல்கலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆய்வு! | Guv Vidyasagar rao inspects Anna University canteens, hostels

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/09/2017)

கடைசி தொடர்பு:09:57 (28/09/2017)

அண்ணா பல்கலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆய்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆய்வுமேற்கொண்டார். 


தூய்மையே சேவை பிரசார இயக்கத்தின் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் உணவு சமைக்கும் இடம், மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வுமேற்கொண்டார். சமையல் ஊழியர்களிடம் தூய்மையின் அவசியம் குறித்து எடுத்துரைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாணவர்களுக்குச் சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்றும், சொந்த வீடுகளில் சமைப்பது போன்ற மனநிலையுடன் சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் உடனிருந்தனர். மாணவிகள் விடுதிக்குச் சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், அங்கிருந்த மாணவிகளிடம் தூய்மையே சேவை பிரசார இயக்கம் குறித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லா விமானங்களைப் பார்வையிட்ட அவர், விமானத்தின் வடிவமைப்பு குறித்து மாணவர்களிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தார். அதேபோல, அந்த விமானத்தை தானே இயக்கியும் பார்த்தார். 

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ’நமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாகாத்மா காந்தி தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர், அவரைப் பின்பற்றி நாமும், அன்றாட வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். தூய்மையைக் கடைபிடித்தால் மட்டுமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்’ என்றார்.