வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (28/09/2017)

கடைசி தொடர்பு:09:54 (28/09/2017)

’இணையம் மூலம் வீடு, சொத்து வரி செலுத்தும் முறை’: புதுச்சேரி அரசு புதியத் திட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வீடு மற்றும் சொத்துகளுக்கான வரிகளை இணையதளம் மூலமே நகராட்சிக்குச் செலுத்துவதற்கான முறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, அதை வசூலிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. ஆனால் வீடுகள், கட்டடங்கள், நிலங்கள் குறித்த உண்மை நிலையைத் தெரிவிக்காமல் பலர் குறைந்த அளவிலான தொகையையே வரியாகச் செலுத்தி வருகின்றனர் என்று நகராட்சிக்குப் புகார் சென்றது. அதைத்தொடர்ந்து வீடுகள் மற்றும் இடங்களைத் துல்லியமாகக் கணக்கெடுத்து வரி வசூல் செய்வதற்காக ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுக்கும் முறையை சில தினங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அதேபோல புதுச்சேரியில் சொத்துவரி கட்டணத்தைப் பொறுத்தவரை, இதுவரை நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே பொதுமக்கள் செலுத்தி வந்தனர். தற்போது உள்ளாட்சித்துறை சார்பில் இணையம் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

வீட்டு வரி

இனி புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்துகளுக்கான  வரிகளை http://.propertytax.puducherry.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று செலுத்தலாம். இணையதளத்தைத் தொடங்கிவைத்த அமைச்சர் நமச்சிவாயம், “உள்ளாட்சித் துறை சார்பில் இணையதளம் மூலம் வரிக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம் பொதுமக்களின் சிரமமும், கால விரயமும் வெகுவாகக் குறையும். மேலும், இனிவரும் காலத்தில் செல்போன் மூலமே சொத்து வரிகளைச் செலுத்தும் முறையை நடைமுறைபடுத்தவிருக்கிறோம். சொத்துகளைக் கணக்கிடும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் இந்தத் திட்டத்தில் குறைபாடுகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் அதைச் சரி செய்யவும் உள்ளாட்சித் துறை தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க