வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (27/09/2017)

கடைசி தொடர்பு:09:50 (28/09/2017)

'அரசு மருத்துவரும் இல்லை; ஆம்புலன்ஸும் வரவில்லை'- கணவன் கண்ணெதிரே உயிரிழந்த மனைவி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் அலட்சியத்தாலும் ஓர் உயிர் மருத்துவமனையிலேயே பரிதாபமாகப் பறிபோனது. 

                

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், செருப்புத் தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்திக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல்போனதால், உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காலை சாந்திக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல்போனது. இதையடுத்து, உடையார்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். மருத்துவமனையில் செவிலியர்களோ, மருத்துவர்களோ யாரும் இல்லை. அங்கிருந்த உதவியாளர் ஒருவரிடம்  கேட்டதற்கு, 'மருத்துவர் வருவதற்கு நேரம் ஆகும்' எனக் கூறியுள்ளார். பிறகு, 108 ஆம்புலன்ஸுக்கு போனில் பேசியிருக்கிறார். அதற்கு அவர்கள், ’அரசு மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவர்கள் சொன்னால் மட்டுமே நாங்கள் வருவோம்; சும்மா வர மாட்டோம்" எனச் சொல்லியதாகத் தெரிகிறது. 

             

நேரம் ஆக ஆக சாந்தி மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அவரது கணவர், மருத்துவர் எப்போது பணிக்கு வருவார் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் மீண்டும் கேட்டிருக்கிறார். ’நீங்கள் கூப்பிட்ட நேரத்துக்கு வந்து பார்க்க மருத்துவர் உனக்கென்ன வேலைக்காரரா’ என ஊழியர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. காலை 9 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த செலிவியர் மூலமாக மருத்துவருக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த மருத்துவர், சாந்தியைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ’மருத்துவர் இருந்திருந்தால் எனது மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம். எனது மனைவி இறந்ததற்கு மருத்துவர்களும், 108 ஆம்புலன்ஸும்தான் காரணம்’ என்று சாந்தியின் கணவர் வேதனையுடன் கூறினார்.

           

இதனிடையே, சாந்தி மரணத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி, மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் டினாகுமாரி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., கென்னடி ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகு, உறவினர்களும் பொதுமக்களும் கலைந்துசென்றனர். பின்பு, சாந்தியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.