'' 'ஹபீஸ் சயீத்' ஒரு காலத்தில் அமெரிக்காவின் டார்லிங்..!'' பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிரடி

கவாஜா ஆசிப்

''பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கும் சுமையாகத்தான் இருக்கிறார்கள். ஹக்கானி நெட்வொர்க் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதத்திற்காக எங்களைக் குறை சொல்ல வேண்டாம். சோவியத் யூனியனுக்கு எதிரான மறைமுகப் போரில் உதவியவர்களைத்தான் இப்போது அமெரிக்கா வெறுக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா அவர்களை செல்லப்பிள்ளையாகவே பார்த்தது'' என்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் பொங்கி எழுந்துவிட்டார். 

ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை அமெரிக்கா  பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசுத் தொகை என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நெருக்கடியால் ஹபீஸ் சயீத்தை வீட்டுக்காவலில் பாகிஸ்தான் அடைத்து வைத்துள்ளது. ஹபீஸ் சயீத், 'மில்லி முஸ்லிம் லீக்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். இதுவும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே, அந்தக் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இன்னும் 'அரசியல் கட்சி' என்று அங்கீகாரத்தை தரவில்லை.

இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விவகாரத்தில் எங்களைக் குற்றம் சாட்டாதீர்கள், சில வருடங்களுக்கு முன்னர் அவர்தான் உங்களுடைய ‘டார்லிங்’ என அமெரிக்காவை பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது.  நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், ''பயங்கரவாதி ஹபீஸ் சயீத் எங்களுக்கும் பெரும் சுமைதான். பயங்கரவாதிகளை ஒழிக்க எங்களுக்கும் கால அவகாசம் தேவை. ஹக்கானி நெட்வொர்க் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவிசெய்கிறது என்று எளிதாகக் கூறிவிடலாம். அதெல்லாம் பேச்சு அளவில் சரி என்று தெரியலாம். உண்மையில் அப்படி இல்லை. ஹக்கானி நெட்வொர்க் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதத்திற்காக எங்களைக் குறை சொல்ல வேண்டாம். கடந்த 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்கு ‘டார்லிங்’காகதான், செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தார்கள்'' என்று ஆவேசமாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!