Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி திரட்டி தாங்களே கால்வாயைச் சீரமைத்த ஊர் மக்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. இந்த அணை நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. அணையிலிருந்து வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் திறந்துவிடுவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்வாய்களும் பொதுப்பணித்துறைமூலம் தூர் வாரப்படும்.

கோப்புப்படம்

ஆனால், பல்வேறு இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மே மாதங்களில் விவசாயப் பயன்பாட்டுக்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் கால்வாய்களில் புதர் மண்டிக்கிடப்பதை அகற்றி, கரைகளைச் சீர்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு, இந்த வகையான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு சில இடங்களில் நடைபெற்றதோடு சரி. இதனால் தெங்கம்புதூர் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் புதர் மண்டிக் கிடப்பதோடு சகதி நிறைந்திருப்பதால், தண்ணீர் கடை வரம்புப் பகுதிகளில் செல்ல முடியாததால் விவசாயம் பாதிப்பதோடு, குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவுகிறது. நாகர்கோவிலை அடுத்த வல்லன் குமாரவிளையில் உள்ள தெங்கம்புதூர் கால்வாய், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் கிடக்கிறது.

குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் இந்தக் கால்வாயைத் தூர்வார, பலமுறை பொதுமக்கள் பொதுப் பணித்துறையினருடன் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்,  ஊர் நிர்வாகிகள் வீடு வீடாக நிதி திரட்டி, பொக்லைன்மூலம்  தூர் வாரினர். இப்பணியை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பார்வையிட்டதோடு, அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும், உடனடியாக விவசாயத்துக்குத் தேவையான நீரை அணையிலிருந்து திறந்துவிடவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement