பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்களுக்குத் தேர்ச்சிபெற கடைசி வாய்ப்பு!

பி.இ., பி.டெக்., படிப்பவர்கள் அரியர் வைத்திருந்தால், கல்லூரி படித்து முடித்த மூன்று வருட காலத்துக்குள் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சிபெற முடியாவிட்டால், பொறியியல் பட்டம் பெற முடியாது. நீண்டகாலமாக இந்த விதிமுறை வழக்கத்தில் இருந்தாலும், இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் கடைப்பிடிக்காமல் மாணவர்களுக்குத் தொடர்ந்து விலக்கு வழங்கிவந்தது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டு முதல் இதைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அரியர்

இதன்மூலம் 2010-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், அரியர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இவர்களுக்கு உதவும் வகையில் 'அரியர் தேர்வை எழுதித் தேர்ச்சிபெற இன்னும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

 "ஒரு மாணவர், பொறியியல் படிப்பில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்குள் அப்படிப்பை முடிக்க வேண்டும் என்பது வரைமுறை. இந்த வரைமுறையைக் கடைப்பிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த ஆண்டு, இந்த வரைமுறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை. ஆனால், ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும், இன்னும் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்று, ஓர் ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது.  

ஏற்கெனவே அரியர் வைத்தவர்களுக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் ஆகஸ்ட் மாதத்திலும் தேர்வு நடத்தப்படும். இந்த இரண்டு தேர்வுகளிலும் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சிபெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வுக்கு எப்போது விண்ணப்பிப்பது, தேர்வுக் கட்டணம் ஆகியவைகுறித்த விவரங்களை விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பின்னர், 2010-ம் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், அரியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, அரியர் தேர்வில் வெற்றிபெற்று, பொறியியல் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!