வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (28/09/2017)

கடைசி தொடர்பு:11:49 (28/09/2017)

ஜெயலலிதா மரணம்: மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா

ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் , கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள்  சிகிச்சைபெற்று வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணை கமிஷன், அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்தன.

 இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. தற்போது, இந்த விசாரணைக் கமிஷனின் விசாரணை இன்னும் மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென விசாரணை கமிஷனிடம் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.