வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (28/09/2017)

கடைசி தொடர்பு:12:25 (28/09/2017)

வழக்கத்தைவிட முன்னதாகப் பூத்த குறிஞ்சி! - அதிர்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

மலர்களில் மகத்துவமானது குறிஞ்சி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதுதான் இதன் மகத்துவத்துக்குக் காரணம். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது குறிஞ்சிப்பூ பூக்கும் காலமும் மாறியிருக்கிறது என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

kurinji

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மறையூர், மூணாறு ராஜமலை போன்ற இடங்களில் குறிஞ்சிப் பூக்கள் பூக்கின்றன. கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்தில் குறிஞ்சிப்பூ பூத்தது. அதன்படி 2018-ம் ஆண்டுதான் குறிஞ்சிப்பூ பூக்க வேண்டும். ஆனால், கொடைக்கானல் மலைப்பகுதிகளில், தற்போது குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு பூக்கவேண்டிய குறிஞ்சிப்பூ வழக்கத்தைவிட முன்னதாகவே பூத்திருக்கிறது என்கிறார்கள், கொடைக்கானல் வாசிகள். 

kurinji

 

இது தொடர்பாகப் பேசிய 'வாய்ஸ்' அமைப்பைச் சேர்ந்த மைக்கேல், ‘‘ கொடைக்கானல் மலைப்பகுதியில் பூக்கும் நீலக்குறிஞ்சி பிரசித்திபெற்றது. இந்தப் பூக்களைக் காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், தற்போது இந்த நீலக்குறிஞ்சி, அழியும் தருவாயில் உள்ள தாவரங்கள் பட்டியலில் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்த புல்வெளிகளை அழித்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். வழக்கமாக கொடைக்கானல் பகுதியில் மார்ச் மாதம் பூக்கத் தொடங்கி, ஓராண்டு வரை பூத்துக்கொண்டே இருக்கும்.

டிசம்பர் மாதத்தில், அதிக அளவில் பூக்கள் இருக்கும். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே குறிஞ்சிப்பூ பூக்கத் தொடங்கியுள்ளது. மலைகளில், உள்பகுதிகளில் இந்த ஆண்டு ஜுன் மாதமே ஒருசில பூக்களைப் பார்த்தோம். தற்போது, பரவலாகப் பூக்கத் தொடங்கியுள்ளது. கொடைக்கானலைப் பொறுத்தவரை, கடந்த ஏழு ஆண்டுகளாக சரியான மழை இல்லை. இந்த ஆண்டுதான் சராசரி மழையளவு கிடைத்திருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் வெப்பம் படிப்படியாக அதிகரித்திருக்கிறது. ஆக, கொடைக்கானலின் இயல்பு மாறியிருக்கிறது. இப்படி மழைக்காலத்தில் மழை பெய்யாமல், வெயில் காலத்தில் வழக்கத்தைவிட அதிக வெயில் எனக் கொடைக்கானலின் பருவநிலை மாறியிருக்கிறது. குறிஞ்சிப்பூக்கள் முன்னதாக பூக்கத் தொடங்கியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பருவநிலை மாற்றம் முக்கியமான காரணம்‘‘ என்றார்.

kurinji

இதுதொடர்பாக, மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ராஜேஷிடம் கேட்டோம். ‘‘வழக்கத்தைவிட முன்னதாக ஒரு தாவரம் பூப்பதாக இருந்தால், அதற்கு பருவநிலை மாற்றம் முக்கியக் காரணமாக இருக்கும். அந்தந்த காலங்களில் இருக்கவேண்டிய சீதோஷ்ண நிலை தற்போது இல்லை. எல்லாமே மாறிக்கிடக்கிறது. ஆடி மாதத்தில் விதைப்பது தமிழர்களின் பழக்கம். தொடர்ந்துவரும் மழை மாதங்களைக் கருத்தில்கொண்டு இதைச் செய்துவந்தார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவேண்டிய காலங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இப்படி எல்லாமே மாறிக்கிடக்கிறது. மண்ணில் சத்துகள் திடீரென அதிகரிக்கும்போதும் இதுபோல முன்னதாக சில செடிகள் பூக்கும். தாவரங்களைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் செயல்படும் தாவரங்கள், இரவு நேரங்களில் செயல்படும் தாவரங்கள் இருக்கின்றன. சில பூக்கள் காலையில் பூக்கும்; சில மாலையில் பூக்கும். சில இரவு நேரங்களில் மட்டுமே பூக்கும் இயல்புடையவை. பருவநிலையில் மாற்றம் வரும்போது, வழக்கமாக பூக்கும் பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிஞ்சிப்பூக்கள் வழக்கத்தைவிட முன்னதாகப் பூத்திருந்தால், பருவநிலை மாற்றம் முக்கியக் காரணமாக இருக்கும்‘‘ என்றார்.

சூழலியலாளர் நக்கீரனிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘குறிஞ்சிப் பூக்கள்ல பல வகை இருக்கின்றன. சில, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். சில, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இன்னும் சில பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். நீலக்குறிஞ்சி என்ற ரகம்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். குறிஞ்சி பூப்பதை ஆங்கில ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், பன்னிரண்டு ஆண்டுகள் சரியாகக் கணக்கிட முடியாது. தமிழ் ஆண்டுகளில் கணக்கிட்டால் இது குறிஞ்சிப்பூ பூக்கும் தருணம்தான். அக்டோபர் மாதம் பரவலாகப் பூக்கத் தொடங்கும். நீலக்குறிஞ்சி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலை முழுவதும் நீலப்போர்வை போர்த்தியதுபோல அதிக அளவில் பூத்துக்குலுங்கும். அதன்பிறகு, படிப்படியாகக் குறையும் என்றாலும் பிப்ரவரி மாதம் வரை குறிஞ்சியைப் பார்க்கலாம். ஆக, இந்த ஆண்டு நீலக்குறிஞ்சி சரியான காலத்தில்தான் பூத்திருக்கிறது என்பது எனது கருத்து’’ என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க