டெங்குக்கு அடுத்தடுத்து 2 சிறுமிகள் பலி! சுகாதாரத்துறை அதிகாரியைச் சிறைப்பிடித்த உறவினர்கள் | health department officials were blocked by people

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (28/09/2017)

கடைசி தொடர்பு:15:32 (28/09/2017)

டெங்குக்கு அடுத்தடுத்து 2 சிறுமிகள் பலி! சுகாதாரத்துறை அதிகாரியைச் சிறைப்பிடித்த உறவினர்கள்

மதுரையில், டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் பலியானதால் கொந்தளித்த உறவினர்கள், சுகாதாரத்துறை அதிகாரியைச் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெங்கு பலி

மதுரை செல்லூர் பகுதியில் வசித்துவந்த 4 வயதுடைய சஞ்சனா என்ற பெண் குழந்தை, கடந்த ஒரு வாரமாக சளித் தொல்லையால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் தன் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாள்கள் ஆகியும் சளி குறையாமல் இருந்ததால், அந்தக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்துள்ளது. கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு ரத்தப் பரிசோதனை செய்தபோது, டெங்கு எனக் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தும் சிறுமி சஞ்சனா உயிரிழந்தார். சஞ்சனாவின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மக்கள் முற்றுகை

இந்தச் சோகம் மறைவதற்குள், மதுரை ஒத்தக்கடை காயம்பட்டி பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி திருச்செல்வி என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பலியானார். கடந்த மூன்று தினங்களாக  திருச்செல்வி காய்ச்சலின் அறிகுறியோடு இருந்ததால், 26-ம் தேதி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால், முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்காத சுகாதாரத்துறை மற்றும் அரசு ஊழியர்களை அப்பகுதி பொதுக்கள் சிறைப்பிடித்தனர். பிறகு, ஒத்தக்கடை காவல்துறையினரும் வருவாய்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

மதுரையில், தொடர்ச்சியாகக் குழந்தைகள் மரணமடைந்துவருவதால், மதுரை மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுகாதாரத்துறை, உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.


[X] Close

[X] Close