வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (28/09/2017)

கடைசி தொடர்பு:15:12 (28/09/2017)

“தமிழர்களை நெருங்கும் பேராபத்து!” - ‘புவிசார் அரசியல்’ குறித்து எச்சரிக்கும் திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

“எல்லா அரசியலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதனால், மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்படவில்லை” என்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி. மாற்று அரசியல் இயக்கங்கள், கட்சிகள்மீது திருமுருகன் காந்தி முன்வைக்கும் விமர்சனங்கள் என்ன? அவரிடம் உரையாடினோம்...

“இந்தியாவில் நடந்துவரும் அரசியல் பற்றி?”

"தற்போது இந்தியாவில் தேர்தல் அரசியல் தோற்றுப்போய்விட்டது. தேர்தல் அரசியல் மூலமாக நாட்டுக்கு நன்மை வரும் என்கிற நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மறக்காமல் ஓட்டுப்போட்டு வருகிறார்கள். இதில், வேட்பாளரை மாற்றியும் ஓட்டுப்போட்டுப் பார்த்துவிட்டார்கள். ஆனால், பலன் இல்லை. எல்லா அரசியலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதனால், மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்படவில்லை. இதற்குமேல் அரசியலை நம்பும் வலிமை மக்களுக்கு இல்லை. பொறுத்துப்பொறுத்துப் பார்த்த மக்கள், தற்போது அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் மெரினாவில் கூடிய ஜல்லிக்கட்டுப் போராட்டம். இதைத்தான் பல நாள்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதை, இப்போது மக்களே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் நடக்கும் கூத்துகளே அதற்குச் சிறந்த உதாரணம்''.

"உங்களுடைய இந்தப் பிரசாரம் எல்லாம் அரசியலுக்கு வரும் முன்னோட்ட யுத்தியா?"

திருமுருகன் காந்தி

"நான், அரசியலில்தான் இருக்கிறேன். இது, இயக்க அரசியல் பயணம். தேர்தல் அரசியலில் இல்லாத, ஓர் அரசியல்தான் மிகப்பெரும் அரசியல். அதைத்தான் இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 'அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், தந்தை பெரியார், வ.உ.சி., பெருஞ்சித்தரனார், நம்மாழ்வார்... இவர்கள் அனைவருமே தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் உரிமைகளுக்காக, நீதிகளுக்காகப் போராடியவர்கள். இவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியலில் பதவி சுகம் அனுபவிக்க பாடுபட்டவர்கள் இல்லை. எனது அரசியலும் அதுபோலத்தான். தேர்தல் அரசியலைத் தவிர்த்து மக்களுக்கு ஆதரவாகப் போராடும் இயக்க அரசியலைச் சார்ந்தது".

"நீங்கள் முன்வைக்கும் அரசியல் என்ன?'' 

"தமிழகத்துக்குத் தற்போதைய தேவையெல்லாம் இயக்க அரசியல் மட்டும்தான். மக்களுக்கு எதிரான அரசியலை எதிர்க்க மிகப்பெரிய இயக்கம் வேண்டும். மக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் வலிமையான இயக்கம் பெரியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் இல்லை. அந்த மாதிரியான ஓர் இயக்க அரசியலுக்குத் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது. பல இயக்கங்கள் உருவாகி அந்த இடத்தை நிரப்ப வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் ஒற்றைத் தலைவர் ஆட்சி முறையும், ஹீரோயிச தலைவர் ஆட்சி முறையும் இருக்க முடியாது. கூட்டுத் தலைமையில்தான் அரசியல் இருக்க வேண்டும். அரசியல் செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் இளைஞர்களும், மாணவர்களும்தான் அரசியலுக்கான தலைமை சக்தியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டை வளமாக மாற்ற வேண்டும் என்றால் இது மட்டும்தான் சாத்தியம்''.

"நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல 'புவிசார் அரசியலால்' தமிழ்நாடு எதிர்கொள்ளப்போகும் பிரச்னைகள் என்ன?"

இந்தியப் பெருங்கடல் ]

"தமிழர்கள் முதலில் புவிசார் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் உலக நாடுகளில் வல்லமையை நிர்ணயிக்கப்போவது, 'இந்தியப் பெருங்கடல்'-தான். அதன் அதிகாரத்தை முழுவதும் எந்த நாடு கைப்பற்றுகிறதோ, அந்த நாடே உலகத்தின் வலிமைமிக்க நாடாக மாறும். அதற்கான முயற்சிகளில் பல நாடுகள் இறங்கிவிட்டன. உலகில் நடக்கும் வணிகங்களில் 70 சதவிகித கடல்வழி வணிகம் இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் நடந்துவருகிறது. நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியப் பெருங்கடலுக்குச் சொந்தக்காரர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் தமிழர்களே. இந்தப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் இடத்தில்தான் தமிழகமும், தமிழீழமும் இருக்கின்றன. இதனால்தான் இந்தியப் பெருங்கடலுக்குத் 'தமிழர் கடல்' என்று பெயர் சொல்கிறார்கள். இந்தப் பெருங்கடலின் அதிகாரத்தைக் கைப்பற்றும் காரணத்தினால்தான் 23 நாடுகள் ஒன்றுசேர்ந்து இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். இதற்கு இந்தியாவும் உதவி செய்தது.

இந்தப் பேராபத்து அடுத்த சில ஆண்டுகளில் மொத்த தமிழினத்துக்கும் வரும். ஏனென்றால், தமிழர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இறையாண்மை அதிகாரம் இல்லை. இந்தியப் பெருங்கடலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளில் தமிழர்கள்தான் வாழ்ந்துவருகிறார்கள். சிங்கப்பூர், பர்மா, மலேசியா, தமிழீழம், தமிழ்நாடு, மாலத்தீவு, மொரீஷியஸ், சேய்ச்சல்ஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழர்களுக்குப் பிரச்னை வரும். அப்போது தமிழர்கள் என்ன செய்வார்கள்? எந்த நாடும் உதவி செய்ய முன்வராது. வரும் நாடுகளும் உதவி செய்வதுபோல நடித்து இந்தியப் பெருங்கடலை ஆட்சி செய்யும் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதுதான் நோக்கமாக இருக்கும். இந்த உண்மையைத் தமிழர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்''.

"உங்களின் அடுத்தகட்டப் பயணம் என்னவாக இருக்கும்?"

"தமிழர்களின் உரிமை பற்றியும், இறையாண்மை பற்றியும், எதிர்காலத்தில் உள்ளூர் அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை நிகழப்போகும் பிரச்னைகளைப்பற்றி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொள்வேன். புவிசார் அரசியல் பற்றிய புரிதல் ஏற்படுத்துவேன். தமிழர்களின் உரிமையைக் காக்கும் அரசு, தமிழ்த் தேசிய அரசியலாக மட்டும்தான் இருக்கும். இதை மையமாகக்கொண்டு கிராமம்கிராமாக இளைஞர்களைத் தேடிப் பயணம் செய்வேன்''.


டிரெண்டிங் @ விகடன்