வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (28/09/2017)

கடைசி தொடர்பு:17:30 (28/09/2017)

கண்டுகொள்ளாத அதிகாரிகள் - மின்சாரத்துக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

இன்னும் ஓர் ஆண்டில்  மின்சாரமில்லாத கிராமமே இந்தியாவில் இருக்காது என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில் மின்சாரத்துக்காக கிராம மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ளது விழுப்பணங்குறிச்சி உப்பிலியம்மன்கோயில். இந்த பகுதிக்குட்பட்ட விழுப்பணங்குறிச்சி காலனித்தெரு, சுள்ளங்குடி காலனித்தெரு, ஒத்தத்தெரு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறைந்த சக்தி உள்ள டிரான்ஸ்பார்மரில் அதிகளவு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவாரத்துக்கும் மேல் மின்சாரம் தடைப்பட்டது. இதை சரிசெய்யக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தகவல் அளித்த பிறகு மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியில் உள்ள பெட்டியை மாற்றிவிட்டு புதிய மின்மாற்றி பெட்டியை வைத்தனர்.

இந்நிலையில் இந்த மின்மாற்றியில் புதிதாக வைக்கப்பட்ட பெட்டியிலும் பழுது ஏற்பட்டு கடந்த சில நாள்களாக மின்சாரம் முழுவதும் தடைப்பட்டது. இம்மின்மாற்றியிலிருந்து குறைந்த மின்அழுத்தத்தில் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருள்கள் பழுதாகி உள்ளது. மேலும், குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதனப் பொருள்களை இயக்குவதில் பெரும் சிரமம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக மின்சாரம் முழுவதும் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வயல்களில் இருக்கும் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. மேலும் கிராமங்களில் குடிநீர் விநியோகமும் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குடிதண்ணீர் எடுத்து வரும் நிலையும் உள்ளது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.