Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அரசு விழாக்களில் பள்ளி மாணவர்கள் அமர்ந்திருப்பது, திறந்தவெளிச் சிறையில் இருப்பதுபோலத்தான்!" - குவியும் கண்டனங்கள்!

மாணவர்


மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழகமெங்கும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதற்காகப் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். அவ்வாறு மாணவர்களை அழைத்து வருவதற்குத் தடை விதிக்குமாறு, சென்னையைச் சேர்ந்த 'பாடம்' நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், 'இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்வது முறையல்ல, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தடை விதித்துள்ளது. 

பள்ளி விடுமுறை நாள்களிலும் மாணவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரச்செய்வது போன்றவற்றை குறித்து, குழந்தைகள் உரிமை ஆர்வலரும், 'தோழமை' தொண்டு நிறுவன இயக்குநருமான தேவநேயனுடன் பேசினோம்.

தேவநேயன் "இந்த விஷயத்தை நாம் அடிப்படையிலிருந்தே தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். குழந்தைகளின் சிறந்த நலனைப் பேணுகிறவர்களாக நாம் இருக்கிறோமா? இதில் நாம் என்பது, தனிநபர், குடும்பம், குழந்தைகள் இயங்கும் அமைப்புகளான பள்ளி, அரசு, பன்னாட்டு அரசு ஆகியவையும் அடக்கம். குழந்தைகளின் நலனை மனம், உடல், அறிவு, ஆளுமை என்பதாகப் பிரிக்கலாம். இவற்றில் எந்த நலனை வளர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு உதவுகிறது? 

இதுபோன்ற விழாக்களில் சாலையில் நின்று வரவேற்பு கொடுப்பது, மலர் தூவுவது போன்றவையும் நடக்கின்றன. இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழக அரசும் இதை ஏற்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எதுவும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. விடுமுறை நாளிலும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது, முற்றிலும் தவறானது. ஏனெனில், விடுமுறை என்பது மாணவர்கள் புத்துணர்ச்சியாகி, அடுத்ததாக நடத்தவிருக்கும் பாடங்களுக்குத் தயாராகும் காலம். அதையும் பறித்துக்கொள்வது முறையல்ல. இந்தப் பிரச்னையைத் தொடக்கம் முதல் வரிசையாகப் பார்ப்போம். 

1. காலையில் ஒன்பது மணிக்கு விழா என்றால், பள்ளியிலிருந்து ஆறு மணிக்குப் புறப்பட வேண்டும். அப்படியெனில், மாணவர் நான்கு மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராக வேண்டும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவார், முழுமையாகச் சாப்பிட முடியுமா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். 

2. பள்ளியிலிருந்து விழா நடக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லும் வாகனம், அனைத்து வகையான அனுமதி பெற்றதுதானா? அதை இயக்குபவர்கள் தகுதியான நபர்தானா? விழா நடைபெறும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் மாணவர்கள் வாகனத்திலிருந்து இறக்கிவிடப்படுகிறார்கள்? பல ஊர்களில் வெகுதூரத்திலேயே மாணவர்களை இறக்கி நடக்க வைக்கிறார்கள். அழைத்துச்செல்லபப்டும் வாகனம் விபத்துக்குள்ளானால் யார் பொறுப்பேற்பது? அதிகாரிகள் ஒருவரையொருவர் கைகாட்டி நகர்ந்துவிடுவர். உண்மையான இழப்பு மாணவரின் குடும்பத்துக்குத்தான். 

மாணவர்

3. விழா நடக்கும் இடத்தில் அமரவைக்கப்பட்டதும், அவர்களுக்கான குடிநீர், பாத்ரூம் வசதிகள் இருக்கின்றனவா என்றால், அவையும் முறையாக இருப்பதில்லை. அதுகுறித்து யாரிடம் கேட்பது என்றும் சொல்வதில்லை. 

4. சாப்பிடக் கொடுப்பது மாணவர்களுக்கு ஏற்ற உணவுதானா என்பதும் கேள்விக்குறிதான். பெரும்பாலும் பிரியாணி/ பிரிஞ்சி எனத் தரப்படும் சூழலில், வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாத மாணவர்களும் அதைச் சாப்பிட வேண்டியதாகிறது. 

5. விழா நடக்கும்போது நண்பர்களோடு மாணவர்கள் பேசினால், ஏற்பாட்டாளர்கள் அவர்களைத் திட்டுகின்றனர். ஆசிரியர்களிடம் கண்டிக்கச் சொல்கின்றனர். 

6. விழா முடிந்ததும் திரும்பவிடும்போது பள்ளியில்தான் விடுகிறார்கள். அங்கேயிருந்து வீட்டுக்கு அரசுப் பேருந்தில் செல்ல வேண்டிருக்கிறது. அப்போது, இலவச பஸ் பாஸைக் காட்டினால் நடந்துநர்கள் விடுமுறை நாளில் ஏற்றுக்கொள்வதில்லை.

7. இவற்றை எல்லாம் கடந்து பார்த்தாலும், அந்த விழாவினால் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏதேனும் கிடைத்ததா எனப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். அரசு விழாவிலும் எதிர் கட்சியை ஏசுவது, மற்றவர் மீது குற்றம் சாட்டுவது என்பதாகவே பேச்சு அமைகிறது. விழாவின் மையப் பொருள் குறித்த விஷயங்கள் மாணவர்களைச் சென்று சேர்வதில்லை. சிலர் குடித்துவிட்டு கலாட்டா செய்வதையும் பார்க்க முடிகிறது. இவையெல்லாமே மாணவர்களுக்குத் தவறான முன் உதாரணங்களாக மாறுகின்றன. 

இவையெல்லாம் அடிப்படையான விஷயங்கள்தான். குடிநீர், சரியான உணவு, பாதுகாப்பற்ற பயணம், அருகில் அமர்ந்திருக்கும் நண்பர்களோடு பேசக்கூடாது என இந்தக் கட்டுப்பாடுகளைப் பார்க்கும்போது, அவர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது. இந்நிலையில், நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இதையும் மீறி மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பதை கண்காணிக்கும் குழுவையும் அமர்த்தினால் சிறப்பானதாக இருக்கும்" என்கிறார் தேவநேயன். 

குழந்தைகள் நலனைவிடவும் அரசின் பெருமைகள் பேசவேண்டியது அவசியம் இல்லை என்பதைத்தான் ஆள்பவர்களை நோக்கி உரக்கச் சொல்லவேண்டியிருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement