விடுமுறையைக் கொண்டாடும் உரிமையாளர்கள்... திண்டாடும் ஆம்னி பேருந்து பயணிகள்!

தனியார் பேருந்து நிலையம்

ண்டிகை காலங்கள், நாலுநாள் சேர்ந்தது போல விடுமுறை வந்தால் மக்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ? ஆம்னி பஸ் ஓனர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என்ற பேச்சு, வழக்கமான ஒன்றுதான். விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் படாதபாடு படவேண்டிய நிலை இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அரசு பஸ்கள் நல்ல நிலையில் இல்லாததாலும், அரசு பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலும் தனியார் ஆம்னி பேருந்துகளை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 

ஆனால், தனியார் பஸ் உரிமையாளர்களோ, இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, பேருந்துகளுக்கான கட்டணங்களை டிமாண்ட்-க்கு தகுந்தாற்போல் தாங்களே நிர்ணயம் செய்துகொள்கின்றனர். அரசுப் பேருந்துகள் பற்றாக்குறை ஒருபுறம் என்றால், அவற்றில் சொகுசாக பயணம் செய்ய முடியாத நிலை மற்றொருபுறம் என்பதால், தனியார் பேருந்துகளில் இருமடங்கு, மும்மடங்கு கட்டணங்களை மக்களின் தலையில் சுமத்தி விடுகிறார்கள் பேருந்து உரிமையாளர்கள். இந்தக் கட்டணக் கொள்ளையில் சிக்கி, சாமான்ய மக்கள் தவிக்கும் நிலை ஒவ்வொரு பண்டிகையின்போது தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனினும், "தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் பத்திரிகைகளிலும், டி.வி. செய்தி சேனல்களிலும் பேட்டி அளிப்பதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கான எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை என்பதே உண்மை. இதே கருத்தை பொதுமக்கள் பலரும் தெரிவிக்கின்றனர். 

ஆறுமுக நயினார்இதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் நம்மிடம் பேசியபோது, "பொதுவாக போக்குவரத்துத் துறையில் ஸ்டேஜ் கேரியேஜ், கான்ட்ராக்ட் கேரியேஜ் என இரண்டு வகை பர்மிட்கள் இருக்கின்றன. அதில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் தனியார் ரூட் பஸ்களும் அடங்கும். ஆனால், ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பர்மிட் கிடையாது. அதனால் அவர்கள் கான்ட்ராக்ட் பர்மிட் வாங்கிக் கொண்டு, சுற்றுலா பயணத்திற்கான அனுமதி போன்று பெற்றுக்கொண்டு, பயணிகளை அழைத்துச் செல்வதாகக் கணக்கு காட்டுகிறார்கள். முறையான பயண டிக்கெட்டுகள் வழங்குவதில்லை. ஏனென்றால், ஆம்னி பஸ்கள் ஓட்டுவதற்கு நமது மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் பர்மிட் வாங்கிக்கொண்டு கான்ட்ராக்ட் சர்வீஸ் முறையில் ஆம்னி பேருந்துகளை இயக்கும் நிலைதான் நீடிக்கிறது. இதனால், அவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியாது. இதை அடிப்படையாகக் கொண்டு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம் என்ற நிலை தொடர்கிறது. "தேவையென்றால் எங்கள் பேருந்தில் வாருங்கள்; இல்லையென்றால் வேறு பஸ்ஸை பார்த்துக்கொள்ளுங்கள்" என்பதே ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கொள்கையாக உள்ளது. ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் அனைவரும் சொகுசாகச் செல்லவேண்டும் என்று நினைக்கும் நடுத்தர மற்றும் உயர்தர குடும்பத்தினர். இவர்கள் கட்டணத்தைப் பற்றி யோசிப்பதில்லை. அதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்களும், பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் தங்கள் விருப்பம் போல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்" என்றார்.

மேலும் அவர், "தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சுமார் 10 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். இப்போது ஆயுதபூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இருப்பில் உள்ள பேருந்துகளும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட பணிமனைகளில் இருந்து வரவழைக்கப்படும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இன்னும் சில தினங்களில் தீபாவளிப் பண்டிகை வருவதால், சொந்த ஊர்களுக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி விடுமுறைக்காக வெளியூர்களுக்குச் செல்வோர் என பேருந்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கோயம்பேடு பேருந்து நிலையம்

தற்போது தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நான்கு நாள்கள் விடுமுறை என்பதால், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு முழுவதுமாக புக்கிங் செய்யப்பட்டு விட்டது. அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள், வேறு வழியின்றி தனியார் பேருந்துகளையே நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதுவே ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வழிவகுக்கிறது. இதைத் தடுக்க வேண்டுமானால்  அரசுப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட வேண்டும். மேலும், அரசுப் பேருந்துகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தாலே தனியார் பேருந்துகளின் கோலோச்சும் கட்டணக் கொள்ளை முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.

தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகளின் தரம் உயர்த்தப்படுவதுடன், முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியதும் அவசியம். தவிர, ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப் போன்ற சொகுசு வசதிகளில் சிலவற்றையாவது அரசுப் பேருந்துகளில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடமை. இதற்கெல்லாம் அரசு நடவடிக்கை எடுத்து, இனி வரும் காலங்களிலாவது தனியார் பேருந்து உரிமையாளர்களின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!