வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (28/09/2017)

கடைசி தொடர்பு:18:20 (28/09/2017)

ரயில் விபத்துகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் - பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

ரயில் விபத்துகளைத் தடுக்க விரைவில் புதுமையான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ரயில்வே சிக்னல்களை மறுசீரமைப்பு செய்தல், ரயில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருவிகளைப் பொருத்துதல், ரயில்களில் மொபைல் ரேடியோ தகவல் தொடர்பை ஏற்படுத்துதல் போன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

பயணிகளுக்கு அதிகளவு பாதுகாப்பு மற்றும் தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ரயில்வே துறை உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்த அவர், தேசிய அளவிலான சொத்தாக விளங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவ முடியும் என்றார். புதிய ரயில் திட்டங்களுக்கும், புதுப்பிக்கப்பட வேண்டிய தண்டவாளங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர், "ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பணியில் இருக்கும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், டிக்கெட் பரிசோதகர்கள் உரிய சீருடையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரயில்வே வழித்தடங்கள் மின்மயமாக்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி சேமிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் டீசலின் அளவும் குறைக்கப்படும்" என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க