ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்- வேல்முருகன் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிகுறித்து தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை நடத்தினால் உண்மை புலப்படாது. அதனால், தமிழக அரசானது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அவரின் மரணம் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்லவேண்டிய கடமை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கள் பணத்தையும், பதவியையும் காத்துக்கொள்ள மிகக்கேவலமான செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

ஜெயலலிதான் மரணம் குறித்த அவர்களின் பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அரசியல்வாதிகள் என்றாலே பதவிக்காக எதையும் செய்யும் கீழ்த்தரமாணவர்கள் என்ற பார்வையை மக்கள் மத்தியில் அவர்கள் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளார்கள். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். அமைச்சர்களின் இந்த கோமாளித்தனமான நடவடிக்கைக்கு அரசு தானாக பொறுப்பேற்று சுயமரியாதையோடு பதவி விலகவேண்டும். அல்லது மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும். கொறடாவின் உத்தரவை மீறிய 12 எம்.எல்.ஏ-க்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்லாமல் சட்டவிரோதமானது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து  ஐ.நா மன்றத்தில் பேசச்சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை சிங்கள வெறிபிடித்த ராணுவத்தினரும், என்.ஜி.ஓ-க்களும் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனி, இதுபோன்ற நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் ஒரு சிங்களர்கூட தொழில் செய்ய முடியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!