வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/09/2017)

கடைசி தொடர்பு:20:40 (28/09/2017)

இந்திய பாம்புகளில் பெரும்பான்மையானவை விஷமற்றவைதான்: பாம்புக் கண்காட்சியில் தகவல்

snake

 மதுரை காந்தி மியூசியத்தில் இன்று பாம்புகள் கண்காட்சியும் , அறிய வகை பாம்புகளின் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது . இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர். மேலும், பாம்புகள் ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் இதில் பங்கேற்றனர். முக்கியமாக, கண்காட்சியில் பாம்புகள் பற்றிய அறிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பாம்பு ஆர்வலர்கள் சிலர் மாணவர்களுக்கு பாம்புகளின் எதார்த்தத்தைக் கூறியபோது, 'பாம்புகள் என்பது எதிரிகள் அல்ல. அவையும் நம்மைப்போல் உயிரினங்கள்தான். அதைச் சீண்ட வேண்டும், அழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அதன் போக்கில் அதைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், அதனால் நமக்கு ஆபத்து இருக்காது. வீட்டின் அருகே சுகாதார முறையில் இடங்களை  வைத்திருக்கவில்லை என்றால்தான் நம் வீட்டைத் தேடி பாம்புகள் வரும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் பாம்புகள் வர அதிகபட்ச வாய்ப்புகள் இல்லை. இந்திய வகை பாம்புகள் அனைத்தும் விஷத்தன்மை கொண்டதல்ல. இந்திய வகை பாம்புகளில் அதிகமானவை விஷத்தன்மை இல்லாததுதான். மேலும், அவைகள் சில நல்ல குணங்களையும் பெற்றிருக்கும். தன் உணவுச் சங்கிலிக்கு ஏற்றார் போல் அவை செயல்படும். பாம்புகள் குறித்த கட்டுக்கதைகளை நம்பக்கூடாது. பாம்புகள் பற்றிய உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாம்பு இனங்களை நம்மால் காப்பாற்ற முடியும்' என்றனர்.

 

பாம்பு

மேலும், இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் பெரியசாமி கூறுகையில், 'பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பாம்புகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். இன்று தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இதில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் அளிக்கப்படும்' என தெரிவித்தார்.