முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஓய்வு! | Former TN chief secretary Rama Mohana Rao retires

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/09/2017)

கடைசி தொடர்பு:18:40 (28/09/2017)

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஓய்வு!

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநருமான ராமமோகன ராவ் இன்றுடன் பணி ஓய்வுபெற்றார்.  

1985-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமமோகன ராவ், ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜெயலலிதா, முதலமைச்சரின் செயலாளராக ராமமோகன ராவை நியமித்தார். ஐந்தாண்டுகள் அந்தப் பதவியை வகித்த ராமமோகன ராவுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தலைமைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், தலைமைச் செயலாளராக ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ல் தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன ராவ் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஒருவரின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது, அதுவே முதன்முறையாகும். மணல் காண்ட்ராக்டர்  சேகர் ரெட்டியின் வீட்டில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்ட ரெய்டில், ராம மோகனராவுக்கு எதிராக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு நடந்தது என்றும் கூறினர். இதனால் தலைமைச் செயலாளர் பதவியை ராம மோகனராவ் இழந்தார்.

காத்திருப்புப் பட்டியலில் சிலமாதங்கள் வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவ், தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரெய்டுக்கான காரணங்கள் ஆகியவை குறித்து தெளிவான பதில் இல்லை. கடந்த 1957-ம் ஆண்டு பிறந்த ராமமோகன ராவ், 60 வயதைப் பூர்த்தி செய்வதால், இன்றுடன் ஓய்வுபெற்றார்.