Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளிப் பல்லக்கு திருடிய கொள்ளையர்கள் கைது... தொடரும் விசாரணை!

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயிலில் வெள்ளிப் பல்லக்கு மாயமான விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயம் சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

பல்லக்கு திருட்டு போன கோயில்

நெல்லை மாவட்டம், சங்கரகோவிலில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில் நடக்கும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தம். கோயிலில் தினந்தோறும் இரவில் நடக்கும் பூஜைக்கு வெள்ளிப் பல்லக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 24.5 கிலோ எடைகொண்ட இந்தப் பல்லக்கில் சுவாமியை வைத்து தூக்கிச் செல்வார்கள். 

கடந்த சில மாதங்களாக இந்த வெள்ளிப் பல்லக்கு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதனால் பல்லக்கு குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில், கோயிலின் நிர்வாக அதிகாரியும் அறநிலையத்துறை துணை ஆணையருமான பொன்.சுவாமிநாதன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாறுதலானார். அப்போது, புதிதாகப் பொறுபேற்ற செல்லத்துரையிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார். அப்போது, வெள்ளிப் பல்லக்கு காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து பொன்.சுவாமிநாதன் சங்கரன்கோவில் டவுன் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில், பல்லக்கு, சுவாமியின் ஆபரணங்கள் உள்ளிட்ட கோயிலின் முக்கிய பொருள்களுக்கான அறையின் சாவி இருந்த நிலையில், வெள்ளிப் பல்லக்கு மட்டும் காணாமல் போனது எப்படி? என போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறை துணை ஆணையரான பொன்.சுவாமிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்திய சங்கரன்கோவில் டவுன் போலீஸார், ஒப்பந்த அடிப்படையில் கோயில் நிர்வாகத்தில் பணியாற்றிய ஒப்பந்தத்  தொழிலாளர்களான களிதாஸ் என்ற கபாலி, ராஜா என்ற பட்டத்துராஜா, திலகராஜ் ஆகிய மூவரைக் கைது செய்தனர். அத்துடன், இவர்களிடம் இருந்து வெள்ளிப் பல்லக்கை விலைக்கு வாங்கி அதை உருக்கிய நகைப்பட்டறை உரிமையாளரான ராஜா என்பவரும் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து இதுவரை 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கும்பல், வெள்ளிப் பல்லக்கை மட்டும் களவாடியதா? அல்லது கோயில் நகைகள், சிலைகளை கொள்ளையடித்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சிலைத் திருட்டுக் கும்பலுக்கும் இந்த கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிலைத் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன் மாணிக்கவேல், சங்கரன்கோவில் கோயிலுக்கு வந்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement