வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (28/09/2017)

கடைசி தொடர்பு:16:03 (13/07/2018)

நீர் நிலைகளை மேம்படுத்திய ராமேஸ்வரம் அரசுப் பள்ளி மாணவர்கள்

ராமேஸ்வரத்தில் பொது நீர்நிலைகள் சீரமைப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு நீர் நிலைகளை மேம்படுத்தினர்.

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் ராமேஸ்வரம் சம்பை மற்றும் சுற்றுப் பகுதியில் நடந்து வருகிறது. நாட்டு நலப்பணி திட்ட தினமான கடந்த 24-ம் தேதி கலாம் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நகரின் பல்வேறு பகுதிகள், பக்தர்கள் நீராடும் கடற்கரை பகுதி என பல இடங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாங்காடு கிராமப் பகுதியில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை மக்களின் பயன்பாட்டில் இருந்து பிறகு மண்மேடிட்டு மறைந்து போன கருப்பட்டி குளம் என்ற பனச்ச குளம் பகுதியில் நடைபெறும் மறு நிர்மானப் பணிகளில் கலந்துகொண்டனர்.

தீர்த்த குளத்தை மேம்படுத்திய மாணவர்கள்

ராமேஸ்வரம் பகுதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக் குளங்களும், தீர்த்தங்களும் இருந்துள்ளன. காலப்போக்கில் பல மறைந்து வழக்கொழிந்து விட்டன. இப்போது ராமேஸ்வரம் திருக்கோவிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்கள் உட்பட சில தீர்த்தங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் "பசுமை ராமேஸ்வரம் "திட்டம் மூலம் மறைந்துபோன தீர்த்தங்கள் மற்றும் பொது நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சில தீர்த்தங்களில் ஒன்றான கருப்பட்டி தீர்த்தம் என பொதுமக்களால் அழைக்கப்படும் பனச்ச தீர்த்தம் முழுமையாக மறு நிர்மானம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பொது நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் கிராமப்பகுதிகளில் விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பசுமை ராமேஸ்வரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரசுவதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயகாந்தன், உதவி முகாம் ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.