வெளியிடப்பட்ட நேரம்: 23:55 (28/09/2017)

கடைசி தொடர்பு:23:55 (28/09/2017)

அவதூறாகப் பேசிய ஆட்சியர்... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள்!

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனை அவதூறாகப் பேசிய ஆட்சியரைக் கண்டித்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்ட ஆட்சியராக இருப்பவர், சந்தீப் நந்தூரி. இவரது முயற்சியால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ’அன்புச் சுவர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பிறருக்கு உதவ விரும்புபவர்கள் இந்தச் சுவரில் புத்தகங்கள், உடைகள், செருப்பு, பர்ஸ், பைகள் என பொருள்களைக் கொண்டு வந்து வைக்கலாம். தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துச் செல்லலாம். மனிதாபிமானத்தை வளர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அவர் முயற்சித்து வருகிறார். அதன்படி, நெல்லை அரசு மருத்துவமனையில் உடனடியாக இந்தத்  திட்டத்தைத் தொடங்குமாறு அவர் டீனை அழைத்து வற்புறுத்தி இருக்கிறார். அவர், ‘சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் கேட்டு இதை செயல்படுத்துகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அனைவரின் முன்னிலையிலும் டீன் சித்தி அத்திய முனவராவை அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றிக் கேள்விப்பட்டதும் அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரான முகமது ரபீக் தலைமையில் 200-க்கும் அதிகமானோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். கறுப்பு பேட்ஜ் அணிந்த டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். ஆட்சியர் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும், அவர் மன்னிப்புக் கேட்கும் வரையிலும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் குமுறினர். 

ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து டாக்டர்களிடம் பேசுகையில், ’’மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் சுயநலத்துடன் செயல்படுகிறார். மாலை நேரத்தில் தாமதமாக ஆய்வுக் கூட்டங்களைத் தொடங்கும் அவர் இரவு 9 மணி வரை கூட்டத்தை நடத்துகிறார். இதனால் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய பெண் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும்போது தேவையே இல்லாமல் பிறரை அவதூறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அன்புச் சுவர் திட்டத்தை மகளிர் வார்டு அருகே உடனடியாகத் தொடங்குமாறு மருத்துவமனை டீன் சித்தி அத்திய முனவராவிடம் வலியுறுத்தியுள்ளார். அவர் உயரதிகாரிகளிடம் கேட்டு செயல்படுத்துவதாகக் கூறியதும், ஒருமையில் அவதூறாகப் பேசியதுடன் கேவலமான வார்த்தையில், எல்லோரின் முன்பாகவும் திட்டியுள்ளார். அவரது இந்த செயல் கண்டனத்துக்குரியது. அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அனைவரின் முன்பாகவும் அவர் டீனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்கிறார்கள், ஆத்திரத்துடன்.  

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவமனையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் அறிவித்திருப்பதால் மருத்துவப் பணிகள் முடங்கும் ஆபத்து எழுந்துள்ளது.