Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிருபர்கள்மீது பிணையில் வர முடியாத வழக்கு..! போராட்டத்தில் இறங்கும் செய்தியாளர்கள் மன்றம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தின் அருகே உள்ள மலையில் மர்மப்பொருள் வெடித்ததாக வெளியான தகவலை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மூவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு செய்தியாளர்களிடம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

செய்தியாளர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்து மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் மலையின் உச்சியிலிருந்து புகை மண்டலம் எழுந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சத்தத்தை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டதாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த மையத்தின் பாதுகாப்பில் ஈடுபடும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் தீவிர சோதனை நடத்தினர். அதில் வெடிப்பொருள் எதுவும் வெடிக்கவில்லை என்பது தெரிய வந்தது. குறவி மலைப் பகுதியின் உச்சியில் உள்ள சுண்ணாம்புப் பாறை உடைந்து விழுந்தபோது ஏற்பட்ட சத்தமும் தூசுப் புகையும் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக காவல்துறை சார்பில் அறிக்கை வெளிடப்பட்டது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர்கள் நாகராஜன், ரெஜூ கிருஷ்ணா, தினகரன் நாளிதழ் செய்தியாளர் ஜெகன் ஆகியோர்மீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூவரின் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 469, 505, 507, ஐ.டி சட்டப்பிரிவு 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்கள் சார்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். செய்தியாளர்களின் மீதான அடக்குமுறையைக் கண்டித்து குமரி மாவட்டம் மார்த்தாண்டம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், நெல்லை பத்திரிகையாளர்மன்றம் சார்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், செய்தியாளர்கள்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்த காவல்துறையைக் கண்டித்து நெல்லை எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நெல்லை பிரஸ் கிளப் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement