வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (29/09/2017)

கடைசி தொடர்பு:11:20 (29/09/2017)

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக ஆவணம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

அ.தி.மு.க அணிகள் பிரிந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் அக்கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சின்னம் குறித்து மேலும் சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். 

ADMK

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து சென்றார். அதன் பிறகு அ.தி.மு.க இரு பிரிவாக செயல்பட்டது. இதனால் தேர்தல் ஆணையத்தால் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. இரு அணிகளும் போட்டிபோட்டு தங்கள் தரப்பு ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து வந்தனர். 

அதன் பிறகு பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்த பிறகு பொதுக்குழு நடத்தி சசிகலா மற்றும் தினகரனைக் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தனர். எனினும் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சின்னம் யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

இதனால், தேர்தல் ஆணையம் இரு தரப்பினருக்கும் கூடுதல் ஆவணங்கள் சமர்பிக்க செப் 29(இன்று) வரை அவகாசம் அளித்தது. தினகரன் தரப்பு கூடுதலாக 15 நாள் வேண்டும் எனக் கூறிய போதும் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. பன்னீர்செல்வம் - பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் குழு இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், அதிகாரிகளைச் சந்திக்கவும் செல்கின்றனர். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், “98% கட்சி நிர்வாகிகள் எங்களிடம்தான் உள்ளனர். கட்சி மற்றும் ஆட்சியை மீட்போம்” எனத் தெரிவித்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார்  ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.