தயாநிதி அழகிரியின் கிரானைட் உரிமம் ரத்து!

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிரானைட்  உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில்  பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் போன்றே முறைகேட்டில்  ஈடுபட்ட மேலும் 15 கிரானைட் அதிபர்கள், தொடர்ந்து தலைமறைவாக இருந்து  வருகிறார்கள்.

அதிகாரிகள் குழு 40-வது நாட்களாக நேற்று துரை தயாநிதி, திமுக பிரமுகர்  சூடம்மணியின் மகன் நாகராஜன் ஆகியோர் பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட்  நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மேலூர் அருகே கீழவளவை அடுத்த அம்மன் கோவில்பட்டி பகுதியில் சுமார் 3 ஏக்கர்  நிலப்பரப்பில் இந்த குவாரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல்  2009-வரை சர்க்கரை பீர் மலைப் பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி அரசு கனிம  நிறுவனத்திற்கு கொடுக்கும் ஏஜெண்டாக இந்த நிறுவனம் செயல்பட்டது.

ஆனால் சில ஆண்டுகள் சட்டவிரோதமாக ஒலிம்பஸ் நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கன  மீட்டருக்கு மேல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளது அதிகாரிகள் ஆய்வில்  தெரியவந்துள்ளது. மேலும் சட்டவிரோத கிரானைட் குவாரிகளில் வெடிகுண்டை வைத்து  கிரானைட் பாறைகளை வெட்டி எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின்  உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக  கிரானைட் கற்களை வெட்டி எடுத்த 50-க்கும் மேற்பட்ட குவாரிகளின் லைசென்சுகளை  ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறுகையில்,"மேலூர் பகுதியில்  நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேடு குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு  வருகிறது. இது தொடர்பான அறிக்கையும் உடனுக்குடன் அரசுக்கு அனுப்பப்பட்டு  வருகிறது. கீழவளவு பகுதியில் இயங்கி வந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரியில்  நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களோ அவர்கள் சார்பாகவோ யாரும்  கிரானைட் முறைகேடு தொடர்பாக எந்த வித விளக்கத்தையும் தரவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் உரிமத்தை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து குவாரிகள் மீதும்  நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உரிய சோதனை முடிவடைந்ததும் அரசுக்கு  முழு அறிக்கை அளிக்கப்படும்”என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!