வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (29/09/2017)

கடைசி தொடர்பு:10:41 (29/09/2017)

வித்தியாசமான தட்கல் டிக்கெட் முன்பதிவு! அதிரவைக்கும் நாசரேத் ரயில் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில் நிலையத்தில் வித்தியாசமான முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அதை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

பயண தேதிக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் முன்பதிவு தொடங்கும். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் முன்பதிவு படுக்கை வசதிக்கு காலை 11 மணிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்துவிடும் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி எனத் தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூர்களிலிருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து டிக்கெட்களைப் பெறும் சூழ்நிலை உள்ளது.

இந்தச்சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. டிக்கெட்களை முன்பதிவு செய்ய வரும் பயணிகள், துண்டு பேப்பரில் தங்களின் பெயர்களை வரிசைப்படி எழுதுகின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் 10 நிமிடத்துக்கு முன்பு வந்து டிக்கெட்களைப் பெற வரிசையில் காத்திருக்கின்றனர். துண்டுப் பேப்பரில் எழுதியவர்களுக்கும் ரயில் நிலையத்தில் காத்திருப்போருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் துண்டு பேப்பர் எழுதும் நடைமுறையை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து நாசரேத் ரயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, "துண்டு பேப்பரில் பெயரை எழுதுவது, கற்கள் உள்ளிட்ட பொருள்களால் இடம் பிடிப்பது தவறு. அது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.