சாலையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது திருமுருகன் காந்தி திடீர் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் இன்று காலை டீக்குடித்துக்கொண்டிருந்தபோது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரைக் காவல் துறையினர் திடீரெனக் கைது செய்துள்ளனர்.

ஜெனிவாவில் நடந்து வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வைகோமீது சிங்களர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தமிழ்புலிகள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்றனர். அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர், அவர்களைத் தடுத்துநிறுத்தியுள்ளார். அப்போது, தடையை மீறி போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்குப் புறப்பட்ட திருமுருகன் உட்பட 3 பேரும் போகும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் டீக் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பத்து காவலர்கள் அந்த இடத்துக்கு திடீரென வந்தனர். டீக் குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!