கூடங்குளத்தில் பதட்டம் நீடிப்பு; கூடுதல் போலீசார் குவிப்பு!

நெல்லை: கூடங்குளத்தில் நேற்று அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும்,  போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோத்லையடுத்து, அங்கு இன்றும் பதட்டம்  நீடிக்கிறது.பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடுதலாக 1000 போலீசார்  வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாருக்கும்,அணு உலை போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்த கூடங்குளத்தில்,  இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.அங்கு பஸ் போக்குவரத்து முழுமையாக  நிறுத்தப்பட்டுள்ளது.கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கூடங்குளம் பகுதியில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில்  ஐ,ஜி.கண்ணப்பன்,டி.ஐ.ஜி.க்கள் ஜான் நிக்கல்சன், பெரியய்யா, அருண் ஆகியோர்  தலைமையில் மேலும் 1000 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் போலீஸ் தடியடியை கண்டித்து இடிந்தகரையில் நேற்று மாலை முதல் 48  மணிநேரம் உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான மைபா ஜேசுராஜ் தலைமையில் பொதுமக்கள் தொடங்கினர்.அவர்கள் இன்று  2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

போலீசார் இடிந்தகரைக்குள் வராமல் இருப்பதற்காக போராட்டக்காரர்கள் ஊருக்கு வெளியே  தடுப்புகளை அமைத்துள்ளனர்.ஆனாலும் நேற்று நுழைந்தது போல், இன்றும்  இடிந்தகரைக்குள் அதிரடியாக போலீசார் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு  பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

144 தடை உத்தரவு நீடிப்பு


இந்நிலையில் கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு நேற்று மாலையுடன்  முடிவடைந்ததால்,தடை உத்தரவை அடுத்த மாதம் 9-ம் தேதி மாலை 6 வரை நீட்டித்து  மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.தடை உத்தரவு உள்ள பகுதிகள்  அனைத்தையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கூடங்குளத்தில் நேற்று நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.  இது தொடர்பாக கூடங்குளம் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை நேற்று வீடு வீடாக  சென்று தேடியது போல் இன்றும் இடிந்தகரை, கூடங்குளம், வைராவிகிணறு உள்ளிட்ட  பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது  தெரியவில்லை.இருப்பினும் அவர் இன்று இரவு சரணடைவதாக அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!