’ஓ.பி.எஸ் தானமாகக் கொடுத்த கிணறு நிரம்பி வழிகிறது’ - மகிழ்ச்சியில் கிராம மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் கிராம மக்கள் தற்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ் தோட்டத்தில் இருந்த ராட்சத கிணற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. சுமார் ஒரு மாதமாக நீண்ட தொடர் போராட்டத்தின் விளைவாக, பன்னீர்செல்வம் அந்தக் கிணற்றை ஊர் மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டார்.

தற்போது தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அந்தக் கிணறு நிறைந்திருக்கிறது. இதனால் லெட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் குடிநீருக்காக இருந்த ஊர்ப் பொதுக்கிணற்றில் தண்ணீர் வற்றி, வறண்டு போனதற்கு காரணமாக இருந்த ஓ.பி.எஸ் கிணற்றை மீட்கவே பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். தண்ணீர் பிரச்னைக்காக மட்டுமல்லாமல், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்காகவும் அவர்கள் அந்தக் கிணற்று தண்ணீரைக் கேட்டனர்.

தற்போது கிணறு நிறைந்திருப்பதால் அப்பகுதியில் கரும்பு சாகுபடி அதிகமான பரப்பளவில் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். லெட்சுமிபுரம் கிராமம் வெல்லச் சந்தைக்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!