வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (29/09/2017)

கடைசி தொடர்பு:15:40 (29/09/2017)

சீர்செய்யப்படும் கும்பக்கரை அருவி! சுற்றுலாப்பயணிகளுக்காக வனத்துறை உடனடி நடவடிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ளது கும்பக்கரை அருவி. சிறந்த சுற்றுலா இடமாக விளங்கும் இந்த அருவியில் தற்போது 29வது நாளாகச் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர்ச்சியான மழையின் காரணமாக அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

அருவியில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக சாய்வான பாறைகளில் கைப்பிடித்து நடப்பதற்காக இரும்புக்கம்பி போடப்பட்டிருந்தது. நாளடைவில் அந்தப் பாதுகாப்புக் கம்பிகள் சேதமடைந்ததால் சுற்றுலாப்பயணிகள் பாறைகளில் தவறி விழும் சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே சீர் செய்யும் பணியில் இறங்கினர். தற்போது புதியப் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விடுமுறை நாள்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் அருவிக்கு வருவது வழக்கம்.

அருவியில் வெள்ளப்பெருக்கு மற்றும் சீர் செய்யும் பணிகள் போன்ற காரணத்தால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச்செல்கின்றனர். விஜயதசமி, ஆயுதபூஜை எனத் தொடர் விடுமுறை நாள்களாக இருப்பதால் அருவியில் நடக்கும் பணிகள் பற்றி அறியாமல் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு வனத்துறை விளக்கம் கொடுத்து பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பிவருகிறார்கள்.