வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/09/2017)

கடைசி தொடர்பு:13:24 (23/11/2017)

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பழனிசாமி - தினகரன் அணிகள் போட்டி போட்டு கூடுதல் ஆவணம் தாக்கல்!

இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை மீட்கக் கூடுதல் ஆவணங்களை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். 

பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்த பிறகு பொதுக்குழு நடத்தி சசிகலா மற்றும் தினகரனைக் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தனர். எனினும் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சின்னம் யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

இதனால், தேர்தல் ஆணையம் இரு தரப்பினருக்கும் கூடுதல் ஆவணங்கள் சமர்பிக்க செப்டம்பர் 29 (இன்று) வரை அவகாசம் அளித்தது. இதனை அடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.
 

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உட்பட தங்களின் பக்கம்தான் 98% கட்சி நிர்வாகிகள் உள்ளனர் எனத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பக்கம் 113 எம்.எல்.ஏ-க்கள் மற்றும், 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியும் இந்த விஷயம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. முன்னர் தினகரன் அணி, தேர்தல் ஆணையம் கேட்டிருந்த கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டிருந்தது. அவகாசம் மறுக்கப்பட்டதால், இன்றே ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை தினகரன் அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் முன்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தினகரன் அணி சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின்போது இரு தரப்பிலிருந்து முக்கியத் தலைவர்கள் ஆஜராவார்கள் எனத் தெரிகிறது. சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.