பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி!

பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக,அதிமுக  உள்ளிட்ட பலவேறு கட்சித் தலைவர்கள் இனறு அஞ்சலி செலுத்தினர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சந்தைப்பேட்டை அருகே உள்ள அவரது  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை 7 மணிக்கு விழா நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் அவரது சொந்த ஊரான  செல்லூர் கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமையில்  பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு தேவேந்திர  பண்பாட்டுக் கழகம் தலைவர் அழகர்சாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
 
அதிமுக சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சுந்தரராஜன்,மாவட்ட செயலாளர்  ஆனிமுத்து, எம்.எல்.ஏ. முருகன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினர்.
 
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி,  முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், முன்னாள் எம்.பி. பவானி  ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, மாவட்ட தலைவர்  ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட செயலாளர் ரங்க நாதன் மற்றும் முத்துசாமி ஆகியோர்  அஞ்சலி செலுத்தினர்.இதேப்போன்று மேலும் பல கட்சித்தலைவர்களும் அஞ்சலி  செலுத்தினர்.
 
கடந்த ஆண்டு ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி இந்த ஆண்டு எவ்வித  அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான பகுதியில் கூடுதலாக போலீசார்  நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் முக்கிய வீதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
 
15-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  அஞ்சலி செலுத்த வருபவர்களை கண்காணிக்க 10 இடங்களில் அதிநவீன கேமிராக்கள்  பொருத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!