வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (29/09/2017)

கடைசி தொடர்பு:17:50 (29/09/2017)

’அரசு மருத்துவமனையா? சிகிச்சை இலவசமா?' - பன்னோக்கு மருத்துவமனையின் இன்றைய நிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கட்டியதோடு, இதன் திறப்பு விழாவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடத்தினார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அந்தக் கட்டடத்தை அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். அதற்கேற்றார் போல் சகல வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக அரசு பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய், இதயம், நரம்பியல், கை - முகம் சீரமைப்பு உட்பட பத்து 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' துறைகள், 400 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனையில் 6 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்றவாரு உணவு வழங்கப்படுகிறது. 

ஓமந்தூரார்
 

தனியார் மருத்துவமனைக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை குறித்த போதுமான விழிப்புஉணர்வு பொதுமக்களுக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. இந்த மருத்துவமனையின் வசதி குறித்து அறிந்துக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கிருந்த டாக்டர்.ஆனந்த குமார் மருத்துவமனையின் வசதிகள் குறித்து நம்மிடம் பேசினார்.

ஓமந்தூரார் மருத்துவமனை


”எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைப் போலவே தமிழகத்திலும் அனைத்து வசதிகளும் அடங்கிய மருத்துவமனை ஒன்று  அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் ஓமந்தூரார் பன்நோக்குஉயர் சிறப்பு மருத்துவமனை. தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் உயர் சிகிச்சைகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவதே இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கம்.  

ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று எடுத்த போக்கில் இம்மருத்துவமனை அமைக்கப்படவில்லை. இதற்கென உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து, இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும்  உயர்தரக் கருவிகளையும் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு மொத்தம் 113 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மருத்துவமனை தொடங்கியது முதல் 50,000க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் 90 விழுக்காடு அறுவை சிகிச்சைகள்  மிகவும் அறியவகை நோய்கள் சம்மந்தப்பட்டதாகும். இதன் மூலம் சராசரியாக 40,000 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டது என்றே நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக அரசு பெரும் தொகை ஒதுக்குவது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. 
இம்மருத்துவமனையில் நரம்பு மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் சிகிச்சை பிரிவு, ஆர்த்ரோஸ்கோபி  மற்றும் ஸ்கேன் பிரிவுகள் உள்ளன. இதில் ஆர்த்ரோஸ்கோபி, ஸ்தீரியோடக்ஸிஸ் (மண்டையோட்டில் துளை போட்டு மூளையில் உள்ள கட்டிகளை அகற்றுவது), நரம்பு அறுவை சிகிச்சை, மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் நோய்க்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதில் வெளி மருத்துவமனைகளில் மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 3000 ருபாய் மதிப்பிலான மருந்து வாரம் இருமுறை  அளிக்கப்படுகிறது. ஆனால் 15,000 ரூபாயிலான நவீனச் சிறப்பு மருந்துகள் இங்கு மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் அளிக்கப்படுகின்றன. இதனால் நோயாளிகள் அலைச்சல்படுவது தவிர்க்கப்படுகிறது. 

இங்கு நூற்றிற்கும் மேற்பட்ட இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாஸ்குலார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், 'எம்சிஐ' ஒப்புதல் அளித்து முதுகலைப்படிப்பிற்கு மருத்துவச் சீட்டுகள் இம்மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனைகளிலிருந்து காப்பாற்ற முடியாத நிலையில் இங்கு வந்த நோயாளிகளையும் உயர்தர சிகிச்சையின் மூலம் காப்பாற்றி உள்ளோம். இம்மருத்துவமனையின் சிறப்பான மருத்துவம் 'இன்டெர்வென்ஷனல் ரெடியாலஜி'. இச்சிகிச்சை முறையின் மூலம் தொடையில் துளைபோட்டு, ஆரம்பகட்ட நிலை நோய்களை அறுவைசிகிச்சை இல்லாமல் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளோம். ஆத்ரோஸ்கோபி சிகிச்சையில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்து இந்தியாவிலேயே 3 வது சிறந்த அரசு மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறோம்.மேலும் ஸ்கேன் பிரிவில் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவி வருகிறோம். வழக்கமாக அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்ய டோக்கன் வழங்கப்பட்டு சிகிச்சை நடத்தப்படும். ஆனால், இங்கு வசதிகள் அதிகமாக உள்ளதால் டோக்கன் ஏதுமின்றி சிகிச்சை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 'கிட்னி கல் மற்றும் அறுவை சிகிச்சை' மற்றும் குடல் மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அடுத்தகட்டமாக உயர்தர சிகிச்சைகள் வழங்குவதற்கு யோசனைகள் மேற்கொண்டு வருகிறோம். 

தற்போது வரை ஒருநாளிற்கு 200 முதல் 500  வெளி நோயாளிகளும் 250 முதல் 300 உள்நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். 'யோகா மற்றும் நாட்ச்சுரோபதி' சிகிச்சையில் தினமும் 40 நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இதுபோன்று உயர்தர சிகிச்சை வழிமுறைகள் அளிக்கப்பட்டும் மக்களுக்கு இதுகுறித்த விழிப்புஉணர்வு இல்லை என்று உணரும்போது வருத்தமாக உள்ளது. ஒரு நாள், நான் டாக்ஸியில் மருத்துவமனைக்கு வரும்போது அந்த கார் ஓட்டுநர், 'இது அரசு மருத்துவமனையா? சிகிச்சை இலவசமா?' என்று கேட்டது எனக்குப் பெரும்  அதிர்ச்சியளித்தது. உள்ளூரில் உள்ளவர்களுக்கே இந்த மருத்துவமனை பற்றி தெரியாதபோது, கிராமப்புற மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றார் .