'வைகோவுக்குப் பாதுகாப்பு அளியுங்கள்!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்டனர். இதைக் கண்டித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் வைகோ

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வைகோ இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், மனித உரிமைகள் மீறல் குறித்தும் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சிங்களர்கள் சிலர் வைகோவைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர். இதையடுத்து வைகோவுக்குத் தனி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வைகோவைத் தாக்க முயன்ற சிங்களர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கக் கோரியும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் வைகோ மீதான தாக்குதல் முயற்சி செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். வைகோவின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!