’பக்தர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியரின் அறிவுறுத்தல்’

பழைய ஆடைகளைக் கடலில் போட வேண்டாம் என பக்தர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது நவபாஷன நவகிரக கோயில். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான யாத்திரைவாசிகள் வருகை தந்து, தங்களது தோஷங்கள் தீர சிறப்புப் பூஜைகள் நடத்துவது வழக்கம். இதற்கென கடற்கரையில் நவபாஷன தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள 'தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்ட தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். 

கடலில் குப்பைகளை அகற்றிய கலெக்டர்

 

தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த ஆட்சியர் நடராஜன் கூறுகையில் 'தேவிபட்டினம் நவபாஷன நவக்கிரக கோயில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணப்பட வேண்டும். திருக்கோயில் வளாகத்தினையும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தினையும் தூய்மையாகவும், பாதுகாப்புடனும்  பராமரிக்க வேண்டும். 

தேவிபட்டினம் கடற்கரைப் பகுதியில் சடங்குகள் செய்ய வரும் யாத்திரீகர்கள் தாங்கள் கொண்டு வரும் உடைகளையும், மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களையும் கடலில் விட்டுச் செல்கின்றனர். இதனால் கடல் நீர் மாசுபடுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக உடைகள் மற்றும் மலர் உள்ளிட்ட பூஜை பொருள்களை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள், டீ கப்புகள் போன்றவற்றை பொது இடங்களில் வீசுவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து பக்தர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, ஆய்வாளர்கள் சுந்தரேஸ்வரி, கர்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!