Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமலதாவுக்குப் புதிய பதவி..! தே.மு.தி.க பொதுக்குழுவில் அறிவிப்பு?

காரைக்குடியில், நாளை நடைபெற உள்ள தே.மு.தி.க பொதுக்குழுக் கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்துக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

தே.மு.தி.க-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், நாளை காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், துவண்டுபோய் இருக்கும் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கட்சியில் பதவி மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, கட்சியினரால் அண்ணியார் என்றே அழைக்கப்பட்ட பிரேமலதா, கட்சி ஆரம்பிக்கப்பட்ட  13 வருடங்களில், எந்தப் பதவியையும் வகித்ததில்லை. இப்போது, முதன்முறையாக அவருக்குப் பதவி வழங்கப்படவிருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக, தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அப்போது அவர், 'நாளை காரைக்குடியில் நடக்கும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அண்ணிக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்போறோம். அதோட, கழகப் பொருளாளராக ஏ.ஆர்.இளங்கோவனை நியமிக்கவிருக்கிறார்கள். பன்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்தவரை அவர் வசம் இருந்து. இப்போது, காலியாக இருக்கும் கட்சியின் அவைத் தலைவராக, தருமபுரி மாவட்டச் செயலாளராக இருக்கும் டாக்டர் இளங்கோவன் நியமிக்கப்படவிருக்கிறார். கழகத்தின் துணைச் செயலாளராக ஜாகீர் உசேன் நியமிக்கப்படவிருக்கிறார். இப்போது, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் வலுவாக இருந்த காலத்திலேயே, தே.மு.தி.க ஆரம்பித்து அவர்களைக் கடந்த தேர்தல் வரை வயிற்றில் புளியைக் கரைக்கவைத்தார். ஆனால், கேப்டனின் சில தவறுகள், தே.மு.தி.க-வைக் கொஞ்சம் மங்கிப்போக வைத்தது. ஆனால் இப்போது, அ.தி.மு.க-வில் பல அணிகள் உருவாகி, அந்தக் கட்சி சின்னாப்பின்னமாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, நடிகர்கள் கமல், விஜய் எல்லாம் கட்சி ஆரம்பித்து கோலோச்ச காய்நகர்த்திவருகிறார்கள். ஏற்கெனவே வலுவான கட்சியாக, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆதாரபூர்வமாகப் பதிந்த தே.மு.தி.க-வை மறுபடியும் வளர்த்தெடுக்க இந்த அரசியல் அசாதாரண சூழல் உதவும் என்று அண்ணியார் நினைத்தார்.

அதனால்தான், தனக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கேட்டு, நாளை அதிகாரபூர்வமாகப் பெறவிருக்கிறார். கேப்டனையும் புது கெட்டப்புக்கு மாற்றியிருக்கிறார். தி.மு.க-வுக்கு ஸ்டாலின் எப்படி செயல்தலைவரோ, அப்படித்தான் இனி தே.மு.தி.க-வுக்கு அண்ணியார். இனி தே.மு.தி.க வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது தே.மு.தி.க-தான். கண்டிப்பாக இந்த முறையும் தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை. விரைவில் ஆட்சி கவிழும். யாரும் எதிர்பார்க்காத கட்சியோடு கூட்டணி அமைத்து, அப்போது ஆட்சி அமைக்கப்போவது நாங்கதான்" என்று பொடிவைத்து முடித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement