மருத்துவமனையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அனுமதி! | perarivalan father admitted in Chennai hospital

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (30/09/2017)

கடைசி தொடர்பு:13:16 (30/09/2017)

மருத்துவமனையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அனுமதி!

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்துவந்தார். இந்த நிலையில், தந்தையின் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனைசெய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை, தாயார் அற்புதம்மாள் கண்ணீர்மல்க வரவேற்றார்.

இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.

இந்த நிலையில், உடல்நிலைக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

சீறுநீரகம், ஆஸ்துமா, நரம்புகள் உள்ளிட்ட பிரச்னைகளால் குயில்தாசன் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லாததால், ஒரு வாரம் சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவுசெய்துள்ளனர். குயில்தாசனுடன் அவரின் உறவினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இதனிடையே, பேரறிவாளன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தாயார் அற்புதம்மாள் கவனித்துவருகிறார்.


[X] Close

[X] Close