தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

தமிழகத்தின் ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர், தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்திருக்கிறார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்துக்கு, கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லை. கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வுபெற்ற பிறகு, வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்துவந்தார். எதிர்க்கட்சிகள், தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காததுகுறித்து பல கேள்விகளை விமர்சனங்களாக முன்வைத்தன. 

இந்நிலையில், தற்போது  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். இவர், தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். இவர்,  மூன்று முறை லோக்சபா எம்.பி-யாக இருந்தவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர் தனிக்கட்சித் தொடங்கி, அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

மேகாலயாவில், தஞ்சையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சண்முகநாதன், பெண்கள் விவகாரத்தில் சிக்கிப் பதவி இழந்த நேரத்தில், புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு வயது 77. 

பி.டி.மிஷ்ரா அருணாச்சலப்பிரதேச ஆளுநராகவும், சத்தியபால் மாலிக் பீகார் ஆளுநராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜகதீஷ் முகி அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தமான் ஆளுநராக இருந்த இவர், தற்போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிக்கோபாருக்கு, தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!