வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (30/09/2017)

கடைசி தொடர்பு:12:30 (30/09/2017)

புதிய ஆளுநர்குறித்து என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓய்வுபெற்றார். இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக அரசியலில் பல அதிரடி பரபரப்பு ஏற்பட்டதோடு, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வில் அதிகாரப்போட்டி நிலவியது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமனம், முதல்வராக சசிகலா பதவியேற்க முயன்ற தருணம், பின்னர் சசிகலா சிறை சென்றது, முதல்வராக பழனிசாமி பதவியேற்றது, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக அரசியல் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஓராண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த இவர், தற்போது தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது நியமனம்குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "தமிழக மக்கள் நலன் கருதி சுதந்திரமாக, நடுநிலையுடன் புதிய ஆளுநர் செயல்படுவார் என நம்பிக்கையுள்ளது. அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்பு, கடமையை உணர்ந்து, ஆளுநர் செயல்படுவார். புதிய ஆளுநருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "தமிழக அரசியல் சூழ்நிலையையும் புதிய ஆளுநர் நியமனத்தையும் இணைத்துப் பார்க்கக்கூடாது" என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், "தமிழக ஆளுங்கட்சியின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் பன்வாரிலால் செயல்படக்கூடாது.  புதிய ஆளுநருக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. புதிய ஆளுநர் எவ்வாறு செயல்படுவார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தி.மு.க எம்.பி, கனிமொழி கூறுகையில், "புதிய ஆளுநர் பன்வாரிலால் ஜனநாயகத்தைக் காப்பார் என நம்பிக்கை உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், "தமிழக அரசியல் சூழ்நிலையில், புதிய ஆளுநரின் பொறுப்பு முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க எம்.பி, அன்வர் ராஜா கூறுகையில், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறோம்" என்று கூறினார்.