வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (30/09/2017)

கடைசி தொடர்பு:13:04 (30/09/2017)

தே.மு.தி.க-வில் விஜயகாந்த், சுதீஷுக்குப் புதிய பதவிகள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பி.எல்.எஸ் பேலஸ் மண்டபத்தில் தே.மு.தி.க மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்குழுவில், கட்சியின் அடுத்தகட்ட முக்கிய முடிவுகளை அறிவிக்கவிருக்கிறார், கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
 
 
தே.மு.தி.க-வின் 12-வது  மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக்  கூட்டம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பி.எல்.எஸ் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்துக்கு, நேற்று மாலை அரியக்குடி தாபா கார்டனுக்குக் குடும்பத்தோடு வந்தார் விஜயகாந்த். இன்று காலை 10 மணிக்கு செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலை, உள்ளாட்சித் தேர்தல்குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலையைக் கருதி பிரேமலதாவுக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்க இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் காலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டார்கள். 10 மணிக்கு மேல் வந்த நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள், அடையாள அட்டையைக் கிழித்தெறிந்துவிட்டுக் கிளம்பினார்கள். பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் யாரும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்பட்டவில்லை.
 
 
சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், ஜெயலலிதாவோடு மோதியதால் சட்டசபை பக்கமே தலைகாட்டாமல் இருந்தார். அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வியடைந்தது. இந்த அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா மரணம், அ.தி.மு.க-வில் பிளவு, இவை எல்லாம் தே.மு.தி.க-வுக்கு பலமாக அமையும் என்று விஜயகாந்த் நினைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தே.மு.தி.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க-வின் இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும் சுதீஷுக்கு, துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் செயல்படுவார் எனவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
 
மேலும், துணைச் செயலாளர்களாக பார்த்தசாரதி, ஏ.ஆர். இளங்கோவன் உட்பட  நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க