நோயைப் பரப்பும் குப்பைகள்! ஜி.எஸ்.டி சாலையில் பதறும் வாகன ஓட்டிகள்

சென்னைப் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கத்தில், ஜி.எஸ்.டி சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பதறியபடி செல்லும்நிலை உள்ளது.

சென்னையின் முக்கியக் குப்பைக்கிடங்குகளாகக் காட்சியளிப்பவை கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்கரணை உள்ள குப்பைக்கிடங்குகள். மாநகரில் உள்ள பெரும்பாலான குப்பைகளும் இங்குதான் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளால் அந்தப் பகுதிகளின் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தக் குப்பைமேடுகளை அகற்றக்கோரி, பொதுமக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். ஆனால், அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதனால், பலர் வீட்டை காலிசெய்துவிட்டு, வேறு இடங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், ஜி.எஸ்.டி சாலை வழியாகப்போகின்றன. புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் பகுதியில், சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. நோய்கள் பரப்பும் சாலையாக ஜி.எஸ்.டி மாறிவருகிறது. தற்போது, தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்தக் குப்பைகளால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பதறியபடி செல்கின்றனர். மேலும் குப்பைகளில் கிடக்கும் கழிவுப் பொருள்களை மாடுகள் சாப்பிட்டுவருகின்றன. இதனால், சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் விபத்துகள் ஏற்படும் நிலையும் உள்ளது.

'நோய் ஏற்படுவதைத் தடுக்க, ஜி.எஸ்.டி சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!