ரத்ததானம் கொடுக்க முன்வாருங்கள்! முதல்வர் பழனிசாமி அழைப்பு

''நடப்பாண்டில், தன்னார்வ ரத்ததானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியத் தன்னார்வ ரத்ததான நாளையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள், தேசியத் தன்னார்வ ரத்ததான நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், போதுமான அளவு ரத்தத்தை தன்னார்வக் கொடையாளிகள் மூலம் பெற, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து ரத்ததான முகாம்களை நடத்துகிறது. இந்த  முகாம்களில், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க, பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்க, ரத்தக் கொடையாளர்கள், ரத்ததான முகாம் அமைப்பாளர்கள் மற்றும் அரசு ரத்த வங்கி ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.  

நாம் ஒவ்வொருவரும் தானமாக அளிக்கும் ஓர் அலகு ரத்தம், நான்கு  ரத்தக்கூறுகளாகப் பிரித்தெடுக்கப்பட்டு, நான்கு உயிர்களைக் காப்பாற்ற  உதவுகிறது.  தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில், கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள்மூலம் 8,89,849 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த வங்கிகளால், கடந்த ஆண்டு 4090 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 3,49,566 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இவற்றில், 99 விழுக்காடு தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள்மூலம் ரத்தத்தைச் சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. எனவே, நடப்பாண்டில் தன்னார்வ ரத்ததானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரத்ததானம் உயிர் காக்கும்! உங்கள் வாழ்வுக்கு புகழ் சேர்க்கும்!" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!