வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (30/09/2017)

கடைசி தொடர்பு:14:40 (30/09/2017)

தமிழன்னை சிலை முன் மருத்துவக் கருவிகளுக்கு வழிபாடு! ஆயுத பூஜையில் இது புதுமை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மிகவும் பிரபலமான பாரதி இதய நோய் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு, தமிழன்னை சிலை முன் ஸ்டெதஸ்கோப், இ.சி.ஜி உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

இந்த வழிபாட்டின்போது, இங்கு பணியாற்றும் ஊழியர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி, நோயாளிகளைப் பெரிதும் ஈர்த்தது. 'இந்தக் கருவிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துவோம். பணியில் நேர்மையாகவும் நோயாளிகளிடம் அன்பாகவும் நடந்து கொள்வோம்' என உறுதி ஏற்றார்கள். ஆயுத பூஜைக்கு வழக்கமாக வழங்கப்படும் சுண்டல், பொரி, அவல் இங்கும் வழங்கப்பட்டன.

புதுமையானமுறையில் கொண்டாடப்பட்ட இந்த ஆயுத பூஜை, பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்த மருத்துவமனை, இதயநோய் மருத்துவர் பாரதிசெல்வனுக்குச் சொந்தமானது. ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்து, இப்பகுதி மக்களால் பெரிது மதிக்கப்படுபவர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நேரத்தில், நெருக்கடிக்கு ஆளான நோயாளிகளிடம் அப்போது பணம் வாங்கிக்கொள்ளாமல், ''எப்ப முடியுமோ அப்ப கொண்டுவந்து கொடுங்க'' எனச் சொல்லி நெகிழவைத்தவர்.  மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்திவருகிறார்.       

இவர், மார்க்ஸியம் மற்றும் தமிழ் தேசிய கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். கடவுள் மறுப்பாளர். இந்த ஆண்டுதான் முதல் முறையாக ஆயுத பூஜை தினத்தன்று கருவிகள் வழிபாடு நடத்தியுள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர் பாரதிசெல்வன், ‘சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள், விழாக் காலங்களில் முற்போக்கு என்ற பெயரில் ஒதுங்கியிருந்து அந்நியப்பட்டுவிடக்கூடாது. மக்களின் பிரச்னைகளைப் பேசப் பயன்படுத்த வேண்டும். எல்லா வகையிலும் ஒன்றுபட வேண்டும். வேளாண் கருவிகள், போர்க்கருவிகளை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு” என்றார்.