`ஆளுநர் பன்வாரிலால் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படக்கூடாது’ - திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்துள்ளார். சற்று முன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

திருமாவளவன்

“புதிய தமிழக ஆளுநருக்கு வாழ்த்துகள். தமிழகத்தின் புதிய ஆளுநராக பா.ஜ.க-வின் ஆதரவாளரே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் பன்வாரிலால், மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படாமல் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட்டு, தமிழகத்தின் அசாதாரண சூழலைச் சரிசெய்ய வேண்டும். மேலும், மக்களை கடுமையான அவதிக்குள்ளாக்கும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும். தனிக்கட்சிப் பெரும்பான்மையாக ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளைப் புரிய வழிவகை செய்கிறது. எனவேதான், கூட்டணி ஆட்சிமுறை என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்குறித்து பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன என்பதால், ஜெயலலிதா மரணம்குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்குழு, நேர்மையாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலும் சட்ட மன்றத் தேர்தலும் அரசியலுக்கு உகந்ததுதான். ஆனால், தமிழகத்தில் தேர்தல் திணிக்கப்படக்கூடாது. அது ஏற்புடையதல்ல. தேர்தல் என்பது இயல்பாக நடைபெற வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!