அனிதா குடும்பத்துக்கு டி.டி.வி.தினகரன் நேரில் ஆறுதல்! ரூ.15 லட்சம் வழங்கினார்

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்தினருக்கு, டி.டி.வி.தினகரன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, 15 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். மருத்துவ கனவில் இருந்த அனிதாவுக்கு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு பேரிடியாக விழுந்தது. நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே எடுத்தார். இதனால் அனிதாவின் மருத்துவக் கனவு கலைந்துபோனது. இதனால், மனவேதனையடைந்த அனிதா, செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாேடு, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அனிதா குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தோடு, நிதியுதவியும் வழங்கினர்.

இந்நிலையில், அனிதாவின் குடும்பத்தினரை இன்று அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் டி.டி.வி.தினகரன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 20 பேர் சேர்ந்து தலா 50 ஆயிரம் மற்றும் பொதுச்செயலாளர் நிதியில் இருந்து  5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் அனிதா குடும்பத்துக்கு நிதியாக வழங்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ''நீட் விவகாரத்தை எங்கள் தரப்பு தொடர்ந்து எதிர்த்தே வந்தது. இப்போது ஆட்சியில் இருக்கும் மக்கள் விரோத அரசுதான் மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிவிட்டது. தமிழக உரிமைகளைப் பாதுகாக்க இனியாவது அனைத்துத் தரப்பினரும் கட்சி பேதமின்று ஓரணியில் திரள வேண்டும். அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அனிதா குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கவில்லை. அனிதா தற்கொலை போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் இனி நிகழக் கூடாது. அனிதா வீட்டுக்கு திருமாவளவன் என்னுடன் ஆறுதல் கூற வந்ததில் அரசியல் இல்லை'' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், ''நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குப் பெறுவதே அனிதாவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்'' என்று கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!