தினகரன் வருகையால் திடீரென மூடப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை!

தினகரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்.ஜி.ஆர் சிலையை மூடியதால் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தினகரன்

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு விவகாரத்தால் கடந்த செப் 1-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவி அனிதாவுக்கு அஞ்சலிசெலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அரியலூர் சென்றார், அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன். அப்போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாகத் தகவல் பரவியது. இதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள், எம்.ஜி.ஆர் சிலையைப் பராமரிப்பு செய்யப்போவதாகக் கூறி, படிக்கட்டுகளை அகற்றிவிட்டு சிலையைத் துணியால் மூடினர். பின்னர், சிலையின் பீடத்தைச் சுற்றி கீற்றுகளால் தடுப்பு அமைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், தினகரன் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு அரியலூர் சென்றார்.

மூடப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை

இதற்குமுன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், "இரட்டை இலை  விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் முடிவில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அது, நடுநிலையாகச் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எடப்பாடி அணியினர் வெற்றிபெறுவது என்பது முடியும் கதையல்ல. அதை எதிர்த்து நாங்கள் வெற்றிபெறுவோம். இறந்துபோன மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்திலிருந்து ரூபாய் 10 லட்சமும், கட்சியிலிருந்து ரூபாய் 5 லட்சமும் நிதியாகக் கொடுக்கப்படும்" என்றார்.

அதற்குப் பின்னர் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ (பதவி நீக்கம் செய்யப்பட்டவர்) தங்க தமிழ்செல்வன், "மறைந்த நடிகர் சிவாஜியின் சிலையை முதல்வர் திறக்காதது வருத்தமளிக்கிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறப்பதாகச் சொல்லியிருப்பது ஏமாற்று வேலை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், அதைவிடுத்து தனிநபர் விசாரணையில் எந்தப் பயனும் இல்லை. மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றுவதற்கே இந்த நாடகம். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதில்தான் கவனம் செலுத்திவருகிறார்கள். இந்நிலையில், நிர்வாகத்தை இவர்களால் எப்படிக் கவனிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!