’அரசியல் நெருக்கடிக்குப் புதிய ஆளுநர் தீர்வு காண வேண்டும்’: ஜவாஹிருல்லா அறிக்கை!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக ஆளுநர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

th governor

ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்துக்கு கடந்த ஓராண்டாக முழுநேர ஆளுநரை நியமிக்காமல் பொறுப்பு ஆளுநரை வைத்து தமிழக அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி  வைக்காமல், அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை பின்நோக்கிச் செல்லும் சூழலை மத்திய பா.ஜ.க அரசு உருவாக்கியது. தற்போது தமிழகத்துக்கென்று ஒரு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். புதிய ஆளுநர் நியமனம் என்பது காலம் தாழ்ந்த முடிவு என்றாலும், ஒரு முழுநேர ஆளுநர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளார் என்பது தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.

புதியதாக நியமிக்கப்பட்டிருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. புதிய தமிழக ஆளுநர் தனது பொதுவாழ்வில், பார்வார்டு பிளாக், காங்கிரஸ், பா.ஜ.க, மீண்டும் காங்கிரஸ், மீண்டும் தற்போது பா.ஜ.க என தனது அரசியலை வாழ்வை தொடர்ந்துவருகிறார். ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார். பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்ட அவர் தமிழ்நாட்டின் தற்போதைய அசாதாரண அரசியல் சூழல் குறித்து நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும். 

ஏற்கெனவே எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழக ஆளுநரிடம் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் “செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல்” உள்ள நிலையில் புதிய ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு அரசியல்சாசனத்தின் விழுமியங்களின் அடிப்படையில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!