'எடப்பாடி அரசு தாமாகவே ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்': பொதுக்குழுவில் விஜயகாந்த்

தே.மு.தி.க-வின் 12-வது செயற்குழு, பொதுக்குழு காரைக்குடி பி.எல்.பி பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க கட்சியின் தலைவராக இருந்த விஜயகாந்த் நிரந்தரப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், இக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், “நீட் தேர்வுக்காக ஓர் ஆண்டு விலக்கு வாங்கித் தருவதாக மாணவர்களை ஏமாற்றிய மாநில அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. மாநில கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் மாறி மாறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு பொறுப்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் மக்களுக்காக அறிவித்த திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. தமிழ்நாட்டில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தங்கள் பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதிலும், தங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை. தமிழகத்தில் சாதாரண குடிமகன் முதல் முதலமைச்சர் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியே அந்தக் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்கள். தமிழகத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது” எனப் பல குற்றச்சாட்டுகளை வரிசையாக எடுத்துப்பேசினார் விஜய்காந்த்.

தொடர்ந்து பேசிய விஜயகாந்த், “எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக வியாபாரிகள் ஆட்சியாகத்தான் தற்போதைய ஆட்சி உள்ளது. மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்களைத் துரத்தும் முன் எடப்பாடி அரசு தாமாகவே வெளியேற வேண்டும்” எனக் கூறியவர், பொதுக்குழுவில் இதை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!