’மேட்டூர் அணை காலம் கடந்து திறக்கப்பட்டுள்ளது’- விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேட்டூர் அணை

’காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து அக்டோபர் 2-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது காலங்கடந்த அறிவிப்பாகும்’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இதைக் கூறியுள்ள அவர், “ முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடும் தேதியை அறிவித்திருந்தால் விவசாயிகள் பயிர் செய்ய தயார் நிலையில் இருக்க உதவியாக இருந்திருக்கும். ஆனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளும் தண்ணீர் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சர் கண்டுகொள்ளாதது கண்டனத்துக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ”மேட்டூர் அணையில் இன்று பிற்பகல் நிலவரப்படி 92 அடி நீர் தேங்கியுள்ளது. வினாடிக்கு ஏறத்தாழ 30000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் முறை வைக்காமல், மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

சாகுபடிக்கானப் பணிகள் தொய்வின்றி நடைபெற, கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும், விதை, உரம் உள்பட அனைத்து இடுபொருள்களும் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறவுள்ள நிலையில் வெறும் 41 கோடி ரூபாய் மட்டுமே சம்பா தொகுப்பு திட்டம் என்ற பெயரில் அறிவித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும்” என்று பி.சண்முகம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!