வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (30/09/2017)

கடைசி தொடர்பு:16:19 (09/07/2018)

இலங்கை அரசு விடுவித்த படகுகள் ராமேஸ்வரத்துக்கு மீட்டு வரப்பட்டன

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 படகுகள் இன்று மாலை மீட்டு வரப்பட்டன.

இலங்கையில் இருந்து மீட்டு வரப்பட்ட படகுகள்

எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல்செய்து அந்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளனர். இந்நிலையில் படகுகளை விடுதலை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் விதமாக  மீனவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த  42 விசைப்படகுகளை மட்டும் விடுதலை செய்ய  இலங்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, விசைப்படகுகளை மீட்கவும், பார்வையிடுவதற்கும் கடந்த மாதம் 17 பேர் கொண்ட அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட குழு இலங்கைச் சென்றது. 42 விசைப்படகுகளில் 10 விசைப்படகுகள் ராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்தவை. இந்த  10 விசைப்படகுகளில் 3 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதால் 7 விசைப்படகுகளை மட்டும் மீட்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி  காலை மண்டபம் வடக்கு துறைமுகத்தில் இருந்து 7 விசைப்படகுகளில் 53 பேர் கொண்ட மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர். இவர்களை இந்தியக் கடலோர காவல் படை சர்வதேச கடல் எல்லை வரை அழைத்துச் சென்று பின் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 2 நாள்களாக இலங்கை காரைநகர் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மைக்கேல், ஜெபதோட்டம், அருளானந்தம், தெட்சிணாமூர்த்தி, நிக்‌ஷன், நிஷாந்தன், ரெஜின் ஆகியோருக்குச் சொந்தமான 7 படகுகளும் பழுது பார்க்கப்பட்டு மீட்புப் படகுகள் மூலம் இழுத்து வரப்பட்டன. இவ்வாறு வந்துகொண்டிருக்கும்போது கடல் சீற்றத்தின் காரணமாக ரெஜின் என்பவரது படகில் நீர் புகுந்தது. இதையடுத்து அப்படகை கச்சதீவு அருகிலேயே நிறுத்திவிட்டு மற்ற 6 படகுகளுடன் மீனவர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்பினர்.

 கடல் சீற்றத்தின் காரணமாக மீட்புக் குழு இந்தியக் கடல் பகுதிக்குள் வருவதற்கு இந்திய கடலோர காவல் படையினர் தாமதமாக அனுமதி அளித்தனர். இதனால், சுமார் 3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தை அடைந்தனர். இதனிடையே, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மேலும் 6 படகுகளை மீட்டு வர மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்கள் இலங்கையில் உள்ள கிராஞ்சி பகுதிக்குச் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.