'விமர்சிப்பவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் காணாமல் போய்விடுவார்கள்’: முதல்வர்

சேலம் கருப்பூர் அரசு பொரியியல் கல்லூரி மைதானத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு குட்டி கதையைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியால்தான் இந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா மிகவும்  சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது பிடிக்காத சிலர் தேடித்தேடி குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களின் எண்ணம் பலிக்காது. எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு குட்டிக் கதை சொல்வார். அதையும் சிலர் விமர்சித்தார்கள். அதற்கு அம்மா அன்று சொன்னார், ’நான் சொல்லும் கதை கருத்துள்ளது, அறிவுள்ளது, தத்துவமானது. யார் என்ன சொன்னாலும் கதை சொல்லுவதை நிறுத்தமாட்டேன்’ என்றார்.

அவர் வழி வந்தவர்கள் நாங்கள். அதனால் என்னையும் இந்த ஆட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு நான் ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு காட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஒரு மரம் இருந்தது. அந்த மரம் பறவைகளுக்கு கூடுகள் கட்டி வாழ்வதற்கு இருப்பிடமாகவும், மனிதர்களுக்கு நிழலாகவும் இருந்தது. மரத்தின் அருகில் ஒரு சிறிய செடி முளைத்தது. கொஞ்ச நாளில் கொடியாக அந்த மரத்தின் மீதே படர்ந்து மரத்தின் உயரத்தைவிட அதிகமாக வளர்ந்தது.

அதனால் கர்வம் கொண்ட அந்த கொடி ஏளனமாக மரத்தைப் பார்த்து 'நீ எத்தனை வருடம் இந்த காட்டில் இருக்கிறாய். நான் உன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்டேன், பார்த்தாயா?' என்றது. அதற்கு மரம் சொன்னது, 'நான் 100 ஆண்டுகள் இங்கு இருக்கிறேன். மழைக்காலத்தில் திடீரென சில செடிகள் முளைத்து கொடிகளாக என் மீதே ஏறி என்னைவிட உயரமாக வளரும். ஆனால், ஓரிரு மாதங்களில் அந்தக் கொடிகள் காய்ந்து காணாமல் போய்விடும்' என்றது. அதைப் போல தற்போது வந்த சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் காணாமல் போய் விடுவார்கள்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!